- பிரதமர் மோடி
- செல்வாப்பேருந்தாள்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- காங்கிரஸ்
- செல்வப்பெருந்தக்காய்
- இந்தியா
- திமுக
- பாஜக
- தின மலர்
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி வலிமை பெற்றிருப்பதால் கடந்த தேர்தல்களில் வெற்றி பெற முடியாத நிலையில் பாஜக வளர்ச்சி என்பது கானல் நீராகிவிட்டதை அறிந்த பிரதமர் மோடி அடிக்கடி தமிழக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் கோபம் கொப்பளிக்கிறது, பதற்றம் அதிகரிக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசுக்கு எதிராக பிரதமர் பதவியில் இருக்கிறோம் என்கிற குறைந்தபட்ச நாகரீகம் கூட இல்லாமல் அவதூறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். தேர்தலின் போது கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றுவதை மூடி மறைக்கின்ற வகையில் அவரது உரை அமைந்திருந்திருக்கிறது. தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தியும் சர்வ அதிகாரம் படைத்த பிரதமர் மோடியோடு மேடையில் அமர ஒருநபர் கட்சிகளைத் தவிர, எந்த அரசியல் கட்சி தலைவர்களும் முன்வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பிரதமர் மோடி, திமுக, காங்கிரஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். இந்தியாவை உலகின் 3வது தலைசிறந்த பொருளாதார நாடுகளில் ஒன்றாக மிக விரைவில் ஆக்க வேண்டுமென்று 10 ஆண்டு ஆட்சிக் காலம் முடிந்து தேர்தலை எதிர்நோக்கும் போது கூறுகிறார். மோடியின் ஒன்பதரை ஆண்டு ஆட்சிக் காலத்தில் சராசரி வளர்ச்சி விகிதம் 6 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கிற போது 5 டிரில்லியன் பொருளாதாரத்தை எப்போது அடையப் போகிறார் என்று பொருளாதார நிபுணர்கள் விமர்சனம் செய்திருக்கிறார்கள்.
திமுக அரசு வெள்ள மேலாண்மையை சரிவர செய்யவில்லை, துயரத்தில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை என்று மோடி குற்றம் சாட்டியிருக்கிறார். தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.37 ஆயிரம் கோடி நிதி கேட்டும், தமிழகத்திற்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் பிரதமர் மோடி இதுவரை ஒரு சல்லிக் காசு கூட வழங்கவில்லை. ஒன்றிய அரசின் வளர்ச்சித் திட்டங்களில் பல லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடிப்பதை அனுமதிக்க மாட்டேன் என்று உரத்தக் குரலில் கூறியிருக்கிறார். ஆனால், நெடுஞ்சாலைத்துறை திட்டத்தில் ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடுகள் நடந்திருப்பதாக ஆதாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பரனூர் சுங்கச்சாவடியில் சி.ஏ.ஜி.ஆய்வு செய்ததில் ரூ.6.5 கோடி முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறியிருக்கிறது. நாட்டிலுள்ள 650 சுங்கச்சாவடிகளையும் சி.ஏ.ஜி. ஆய்வு செய்தால் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள், ஊழல்கள் நடந்திருக்குமோ என்ற பேரதிர்ச்சி ஏற்படுகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் மோடி ஆட்சியை அகற்ற தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி அணி திரண்டு நிற்கிறது. மக்கள் விரோத மோடி ஆட்சியை அகற்ற ராகுல்காந்தி தம்மை வருத்தி நடைபயணம் மேற்கொண்டு மக்களோடு மக்களாக அவர்களது துயரங்களை பகிர்ந்து கொண்டு மாபெரும் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அவரது உழைப்பிற்கு பலன் தருகிற வகையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மீண்டும் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிய ஆட்சியை கைப்பற்றுகிற காலம் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post நீலிக்கண்ணீர் வடிக்கும் பிரதமர் மோடியுடன் மேடையில் அமர எந்த கட்சியும் முன்வரவில்லை: செல்வப்பெருந்தகை கிண்டல் appeared first on Dinakaran.