×

அரசு பஸ்களில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து புகார் வரக்கூடாது: கண்டக்டர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தல்

சென்னை: அரசு பேருந்துகளில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து எந்த புகாரும் வரக்கூடாது என ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கை: விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் மாற்றுத்திறனாளிகளை பயணிக்க அனுமதிப்பதில்லை எனவும் இருக்கை உடனடியாக வழங்கப்படாமல் தாமதப்படுத்துவதாக புகார் வருவதாக விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் இடையே தேவையற்ற பிரச்னை ஏற்படுவதுடன் பொதுமக்கள் மத்தியில் நிர்வாகத்தின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுகிறது.

இதை தவிர்க்கும் பொருட்டு, விரைவு பேருந்துகளில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகளிடம் அன்பாகவும், பண்பாகவும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நடந்து கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் உதவிகளைச் செய்ய வேண்டும். அதோடு, மாற்றுத்திறனாளிகளுடன் ஏதும் வாக்குவாதம் ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட பேருந்து நிலைய பொறுப்பாளர் அல்லது நேர காப்பாளரிடம் தெரிவித்து தீர்வு காண வேண்டும். குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளை பாதுகாப்பாகவும், தக்க மரியாதையுடனும் கவுரவத்துடனும் பயணிக்க உதவி புரிவது நமது கடமை. இனி வரும் காலங்களில் குளிர்சாதன பேருந்துகள் தவிர்த்து (தமிழகத்துக்குள் மட்டும்) இதர பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் துணையாளர்கள் பயணிக்க அனுமதி அளித்து எந்தவித புகாரும் வராத வண்ணம் பணிபுரிய அனைத்து நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அரசு பஸ்களில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து புகார் வரக்கூடாது: கண்டக்டர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...