×

தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் கேரளாவில் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ்: அரசு, தனியார் மருத்துவமனைகளில் தனி வார்டுகள்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேற்று மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் நோய் மீண்டும் பரவி வருகிறது. இந்த நோய் பாதித்து இதுவரை 2 பேர் இறந்து விட்டனர். இந்த நோய் பாதித்து கோழிக்கோட்டில் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த 50க்கும் மேற்பட்டோரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் அவர்களில் ஒருவருக்கு நேற்று நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து இதுவரை கேரளாவில் நிபா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது. நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து கோழிக்கோட்டில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டு உள்ளன. பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நேற்று முதல் நாளை வரை 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. 10க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த 950 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசின் சுகாதார குழுக்கள் கோழிக்கோட்டில் முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர்.

இன்று காலை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் முகம்மது ரியாஸ், சசீந்திரன், அகமது தேவர்கோவில் மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது. கோழிக்கோட்டிலுள்ள அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்காக தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவசர தேவை இல்லாமல் யாரும் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

*மருந்து கம்பெனிக்காக நிபா பரப்பப்படுகிறது முகநூலில் பதிவிட்ட வாலிபர் மீது வழக்கு
கோழிக்கோடு கொயிலாண்டி பகுதியைச் சேர்ந்த அனில்குமார் (29) என்ற வாலிபர், ஒரு பிரபல மருந்து நிறுவனத்திற்காக நிபா போலியாக பரப்பப்படுகிறது என்று தன்னுடைய முகநூலில் பதிவிட்டிருந்தார். இதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக கொயிலாண்டி போலீசுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அனில்குமார் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் கொயிலாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

*ஆஸ்திரேலியாவில் இருந்து மருந்து இறக்குமதி
நிபா வைரஸ் தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குனர் ஜெனரல் ராஜீவ் பாகல் கூறுகையில், ‘‘ 2018ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிடம் இருந்து மோனோகுளோனல் ஆன்டிபாடி டோஸ் வாங்கப்பட்டது. தற்போது 10 நோயாளிகளுக்கு தேவையான அளவு டோஸ்கள் மட்டுமே கையிருப்பில் உள்ளது. நிபா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆஸ்திரேலியாவிடம் இருந்து மேலும் 20 டோஸ் மோனோகுளோனல் ஆன்டிபாடி வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேசஅளவில் நிபா வைரசால் பாதிக்கப்பட்ட 14 பேருக்கு மோனோகுளோனல் ஆன்டிபாடி டோஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் உயிர் பிழைத்துள்ளனர். ஆனால் நோய்தொற்றின் ஆரம்ப கட்டத்தில் தான் மருந்து கொடுக்கப்பட வேண்டும். நிபா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பு விகிதமானது கொரோனா இறப்பு விகிதத்துடன் ஒப்பிடும்போது மிக அதிகமாக உள்ளது” என்றார்.

*சபரிமலை பக்தர்களுக்கு கட்டுப்பாடு?
நிபா வைரஸ் நோய் பரவாமல் இருப்பதற்காக கோழிக்கோடு மாவட்டம் முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடற்கரை, பூங்காக்கள் உள்பட பல பகுதிகளில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. இதையொட்டி இதுவரை தரிசனத்திற்காக 35 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.நிபா வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில் சபரிமலை பக்தர்களுக்கு கட்டுப்பாடு ஏற்படுத்த வேண்டுமா என்பது குறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆணையருடன் ஆலோசித்து முடிவெடுக்க கேரள சுகாதாரத்துறை செயலருக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் கேரளாவில் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ்: அரசு, தனியார் மருத்துவமனைகளில் தனி வார்டுகள் appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kozhikode, Kerala ,Kerala ,
× RELATED கேரளாவில் 10ம் வகுப்பு...