×

நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழையால் பசுந்தேயிலைக்கு உரமிடும் பணிகளில் விவசாயிகள் தீவிரம்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் தற்போது பசுந்தேயிலைக்கு உரமிடும் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய தோட்ட தொழிலாக தேயிலை விவசாயம் விளங்கி வருகிறது. சுமார் 55 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும், 100க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளும் உள்ளன.

தேயிலை தொழிலை நம்பி மாவட்டம் முழுவதும் சுமார் 60 ஆயிரம் சிறு குறு விவசாயிகள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் டிசம்பர் வரையில் பெய்யும் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைகளின்போது தேயிலை மகசூல் அதிகரிக்கும். விவசாயிகள் வருவாய் ஈட்டும் பொருட்டு தங்கள் தோட்டங்களுக்கு உரமிட்டு பராமரிப்பது வழக்கம்.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, மஞ்சூர், குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் இம்மாத துவக்கத்தில் இருந்து அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. மகசூல் அதிகரிப்பு காரணமாக கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ளது. வருவாய் ஈட்டும் நோக்கில் உரமிடும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு தட்டுப்பாட்டின்றி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழையால் பசுந்தேயிலைக்கு உரமிடும் பணிகளில் விவசாயிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Dinakaran ,
× RELATED நீலகிரியில் பருவ மழை துவக்கம்...