×

மழைக்காலத்தில் வீடுகளில் நல்ல தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்து இருந்தால் டெங்கு பாதிப்பை தடுக்கலாம் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தல்

சென்னை, டிச. 4 : மழைக்காலத்தில் வீடுகளில் நல்ல தண்ணிர் தேங்காமல் சுத்தமாக வைத்து இருந்தால் டெங்கு பாதிப்பு தடுக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் பருவமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை கடந்த வாரம் நிவர் புயல் தாக்கியது. இந்த வாரம் தென்மாவட்டங்களில் புரெவி புயல் தாக்கியது.இதனால் மழைக்கால நோய்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மருத்து நிபுணர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பர வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக வீட்டில் உள்ள நல்ல நீரில் தான் டெங்கு கொசு உருவாகும் என்பதால் வீடுகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: டெங்கு, கொரோனா என்று அனைத்து நோய்களுக்கும் காய்ச்சல், சளி, இருமல் என்பது பொதுவான அறிகுறியாக உள்ளது. எனவே வீட்டைச் சுற்றி மற்றும் வீடுகளுக்கு உள்ளே  கொசு வராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பழைய குப்பைகளை உடனடியாக  அகற்ற வேண்டும். குறிப்பாக வீட்டின் மொட்டை மாடியில் நல்ல நீர் தேங்கும் வகையில் உள்ள பொருட்களை  அகற்ற வேண்டும்.

குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தொற்று நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.  எனவே அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரிக்கும் வகையில் உணவுகளை அளிக்க வேண்டும். தினசரி அல்லது வாரம் இரண்டு முறை  நிலவேம்பு  மற்றும் மூலிகை டீ அருந்தலாம். குடிநீரை கொதிக்க விட்டு அருந்த வேண்டும்.
குறிப்பாக சளி, காய்ச்சல், இருமல், உடல் வலி, தலை வலி, உடல் சேர்வு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் டெங்கு மற்றும் கொரோனா பரிசோதனை இரண்டும் செய்து கொள்ள வேண்டும். ஒரு பரிசோதனை செய்து விட்டு மற்றும் ஒரு சோதனையை செய்யாமல் இருக்க கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : experts ,homes ,season ,spread ,
× RELATED 17வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை மறுநாள்...