×

சாத்தனூர் அணையில் கலெக்டர் ஆய்வு கணக்குகளை சரியாக பராமரிக்காத பிடிஓக்களுக்கு ‘டோஸ்’ முறையாக பராமரிக்க அறிவுரை

தண்டராம்பட்டு, டிச.3: தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணையில் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது கணக்குகளை சரியாக பராமரிக்காத பிடிஓக்களுக்கு பராமரிக்க அறிவுரை வழங்கினார்.தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டது. தற்போது நீர் வரத்தின் காரணமாக 92.45 அடியை எட்டியுள்ளது. இதனை நேற்று கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார். இதையடுத்து சாத்தனூர் அணையின் நீர்மட்டம், பூங்கா பராமரிப்பு, மின்சாரம் தயாரிக்கும் இடம் போன்ற இடங்களை ஆய்வு செய்து பொறியாளர் அறிவழகன், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் ஆகியோரிடம் பணிகளின் நிலைமை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் தண்டராம்பட்டு பிடிஓ அலுவலக வளாகத்தில் செய்யப்பட்ட பணிகளின் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்தார். அப்போது, பிடிஓக்கள் கணக்குகளை சரியாக பராமரிக்கப்படாதது தெரியவந்தது. மேலும், எந்த ஆண்டு எந்த பணிகள் செய்யப்பட்டது? அதற்கான முழு விபரங்கள் எதுவும் குறிப்பிடப்படாமல் இருந்தது.இதைப்பார்த்த கலெக்டர் சந்தீப் நந்தூரி, அதிர்ச்சியடைந்து வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு கணக்குகளை சரியாக பராமரிக்கப்படாதது குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினார். அதற்கு பிடிஓக்கள் கணக்குகளை சரிபார்த்து விரைவில் முடிப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அரசு கணக்கு வழக்குகளை முறையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதையடுத்து, தண்டராம்பட்டு, கீழ்ராவந்தவாடி பகுதியில் அமைந்துள்ள பெரிய ஏரியில் செய்யப்பட்ட குடிமராமத்து பணியை பார்வையிட்டார். பின்னர் வரகூர் கிராமத்தில் கனிமவள நிதியிலிருந்து ₹63 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் மாதிரி பள்ளிக்கூடம், சிறுப்பாக்கம் கிராமத்தில் அமைக்கப்படும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆகியவற்றை பார்வையிட்டார்.அப்போது ஆர்டிஓ தேவி, மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயசுதா, தாசில்தார் மலர்கொடி, பிடிஓக்கள் கோவிந்தராஜுலு, சம்பத், ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்துலட்சுமி முருகேசன், தனக்கோட்டி, பாண்டுரங்கன், ஊராட்சி செயலாளர்கள் வெங்கடேசன், ரகு, தர் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : PDOs ,collector inspection ,Sathanur Dam ,
× RELATED 5 நட்சத்திர குறியீடு பெற்ற சத்துணவு...