×

மண்டல இணை இயக்குனர் ஆய்வு தமிழகத்தில் 8 மாத பொதுமுடக்கத்திற்கு பிறகு

வேலூர், டிச.3:தமிழகத்தில் 8 மாத பொது முடக்கத்திற்கு பிறகு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் முதுகலை அறிவியல் மாணவர்களுக்கு வகுப்புகள் நேற்று முதல் தொடங்கியது. பெரும்பாலான மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வந்தனர்.இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள் உள்பட பல்வேறு பணிகள் முடக்கப்பட்டது. பஸ், ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது. கோயில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையில் கொரோனா தொற்று குறைய தொடங்கியதும் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதில் கோயில்களில் குறைந்தளவு பக்தர்கள் சமூக இடைவெளியுடன் தரிசிக்க அனுமதிக்கப்பட்டது.
மேலும் பஸ்கள் குறைந்தளவில் இயக்கப்படுகிறது. சினிமா தியேட்டர்களும் திறக்கப்பட்டது. ஆனால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் என்று வல்லுநர்களும், பெற்றோர்களும் கவலை அடைந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் 9, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் மற்றும் அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளி , கல்லூரி விடுதிகள் மற்றும் பணியாளர்கள் விடுதிகள் உள்பட அனைத்து விடுதிகளும், கடந்த 16ம்தேதி முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டது.இதுதொடர்பாக கருத்து கேட்கப்பட்ட நிலையில், பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. மற்ற அனைத்து ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு மட்டும் கல்லூரி, பல்கலைக்கழகங்களை நேற்று முதல் திறக்கும்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.அதன்படி தமிழகம் முழுவதும் முதுநிலை 2ம் ஆண்டு அறிவியல், பொறியியல், தொழில்நுட்ப பிரிவு, ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கு நேற்று காலை முதல் கல்லூரிகளில் வகுப்புகள் தெடங்கியது. இதனால் மாணவர்கள் உற்சாகமாக கல்லூரிகளுக்கு வந்தனர்.

வேலூர் மாவட்டத்திலும் வழக்கம்போல் மாணவர்கள் காலையில் வகுப்புகளுக்கு வர தொடங்கினர். வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி, டி.கே.எம் கல்லூரியில் வேலூர் மண்டல கல்வியல் கல்லூரி இணை இயக்குனர் எழிலன் ஆய்வு மேற்கொண்டார். அரசு தெரிவித்த வழிக்காட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா? என வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களை ஆய்வு செய்தார். இதுகுறித்து வேலூர் மண்டல கல்வியல் கல்லூரி இணை இயக்குனர் எழிலன் கூறியதாவது:வேலூர் மண்டலத்தில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உட்பட 10 மாவட்டங்கள் உள்ளது. இங்கு அரசு மற்றும் தனியார், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என மொத்தம் 149 உள்ளன. முதுகலை அறிவியல் பாடப்பிரிவுகள் 100 கல்லூரிகளில் உள்ளது. இந்த கல்லூரிகள் மட்டும் திறக்கப்பட்டது. அரசு அறிவித்த வழிக்கட்டு நெறிமுறைகள் படி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.

மாணவர்கள், பேராசிரியர்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும். வகுப்பறை உள்ளே செல்லும் போது கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். தெர்மல் கருவி கொண்டு உடல் வெப்ப நிலை அளவீடு செய்ய வேண்டும். கழிவறையை ஒவ்வொரு நபராக பயண்படுத்த வேண்டும். வகுப்பறை முழுவதும் தினந்தோறும் கிருமிநாசினியை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். வகுப்புறையில் சமூக இடைவௌியுடன் மாணவர்கள் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 7ம் தேதி இறுதி ஆண்டு பயிலும் இளகலை மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.கேப்சன்..வேலூர் முத்துரங்கம் அரசு கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகளை தெர்மல் கருவியை கொண்டு உடல் வெப்பநிலை சோதனை செய்யப்பட்டது. அடுத்தபடம்: சமூக இடைவெளியுடன் வகுப்பறையில் பாடம் நடத்தும் பேராசிரியை.

Tags : Tamil Nadu ,shutdown ,
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...