டெல்லியில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவாக விவசாயிகள் சங்கம் முற்றுகை, ஆர்ப்பாட்டம்

தஞ்சை, டிச. 3: டெல்லியில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவாக தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சையில் 40 பேர் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் கடுங்குளிர், பனியிலும் பசி, தூக்கம் மறந்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மோடி அரசின் ஒடுக்குமுறைகளை கண்டித்தும் தஞ்சை ரயில் நிலையம் முன் அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகி மோகன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொது செயலாளர் துரை மாணிக்கம் துவக்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி நடராஜன் நிறைவுரையாற்றினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் நீலமேகம், மாநகர செயலாளர் குருசாமி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணை செயலாளர் கல்யாணசுந்தரம், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் அருணாசலம், தாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பழனிராஜன் மற்றும் பலர் பங்கேற்றனர். தஞ்சை ரயில் நிலையம் முன் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் புண்ணியமூர்த்தி தலைமை வகித்தார். பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் மணி வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மறியலில் ஈடுபட முயன்றனர். இதைதொடர்ந்து ரயில் நிலையத்தை முற்றுகையிட சென்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். தஞ்சை தலைமை அஞ்சலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகக்குழு உறுப்பினர் ஜீவக்குமார் தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது. இதை டிஎஸ்பி பாரதிராஜன் தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அஞ்சலகம் வாயிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். இதையடுத்து 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம்: கும்பகோணம் காந்தி பூங்கா அருகே அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநிலக்குழு உறுப்பினர்; சாமு.தர்மராஜன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் கணேசன், விவசாய பாதுகாப்பு சங்க மாவட்ட அமைப்பாளர் பாலகுரு, விவசாய தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜ் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ் மாவட்ட செயலாளர் பாரதி, நகர செயலாளர் மதியழகன், மதிமுக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பாபநாசம்: பாபநாசம் அருகே அம்மாப்பேட்டை அடுத்த கொக்கேரியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் சங்க ஒன்றியக்குழு உறுப்பினர் உத்திராபதி தலைமை வகித்தார். இதில் பங்கேற்றவர்கள் கழுத்தில் தூக்கு மாட்டி கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய பொருளாளர் தாமரைச்செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>