×

டெல்லி போராட்டத்திற்கு புதுகை விவசாயிகள் ஆதரவு

புதுக்கோட்டை, டிச.3: விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புதுக்கோட்டையில் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமையன் தலைமை வகித்தார். விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் சங்கர் ஆர்ப்பட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் திமுக விவசாய அணி மாவட்ட செயலாளர் பழனியப்பன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கறம்பக்குடி: கறம்பக்குடி சிஐடியூ சங்கத்தினர் சார்பில் அம்புக்கோவில் முக்கம் சாலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிராக அறிவித்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், தலைநகர் டெல்லியில் நேற்று வரை வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து 7 வது நாளாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்து சிஐடியூ சங்க ஒன்றிய செயலாளர் வீரமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் கம்ம்யூனிஸ்ட் காட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அறந்தாங்கி: அறந்தாங்கியில் சப் கலெக்டர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கவிவர்மன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் செங்கோடன் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் தங்கராசு, சுப்பிரமணியன், தென்றல்கருப்பையா, இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ராஜேந்திரன், பெரியசாமி, முத்துச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Delhi ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...