×

திருமருகல் அருகே கட்டுமாவடியில் ஆபத்தான ஊராட்சி அலுவலக கட்டிடத்தை இடிக்க கோரிக்கை

நாகை, டிச.3: திருமருகல் அருகே கட்டுமாவடியில் ஆபத்தான நிலையில் உள்ள ஊராட்சி அலுவலகத்தை இடிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். திருமருகல் அருகே கட்டுமாவடி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு சொந்தமான அலுவலகத்திற்கு கட்டுமாவடி, துண்டம், கோதண்டராஜபுரம், தண்டாளம், புறாக்கிராமம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக தினந்தோறும் வந்து செல்கின்றனர். ஊராட்சிமன்ற கட்டிடம் கடந்த 1988ம் ஆண்டு அந்த பகுதி ஊராட்சி மன்ற தலைவராக இருந்த ஷேக்அலாவுதீன் காலத்தில் கட்டப்பட்டது. பின்னர் 2006ம் ஆண்டு ரூ.40 ஆயிரம் மதிப்பில் பழுது நீக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த அலுவலகம் எந்தவித பராமரிப்பும் இன்றி பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் கட்டிடத்தின் மேற்கூரையின் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. மழைக்காலம் என்பதால் கட்டிடத்திற்குள் மழைநீர் ஒழுகுவதால் ஆவணங்கள் சேதமாகி வருகிறது.

இதில் பணிபுரியும் அலுவலர்கள் கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்துடன் இருந்து வருகின்றனர். மேலும் ஊராட்சி அலுவலகத்திற்கு பல்வேறு தேவைகளுக்கு வரும் பொதுமக்களும் தற்போது மழைகாலம் என்பதால் கட்டிடத்தில் ஆபத்தான நிலையை உணர்ந்து அச்சம் காரணமாக அலுவலகம் வருவதை தவிர்த்து வருகின்றனர். எனவே பழுதடைந்த ஊராட்சி அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Tags : demolition ,panchayat office building ,Thirumurugal ,Kattumavati ,
× RELATED NCERT பாடப்புத்தகங்களில், பாபர் மசூதி...