×

பொதுமக்கள் அச்சம் மயிலாடுதுறையில் கையும், களவுமாக பிடிபட்ட பைக் திருடன் தப்பியோடியவர், அடைக்கலம் கொடுத்தவருக்கு வலை

மயிலாடுதுறை, டிச.3: மயிலாடுதுறையில் பைக் திருட்டில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தப்பியோடிய மற்றொருவரையும், திருடர்களை சென்னையிலிருந்து வரவழைத்து அடைக்கலம் கொடுத்த நபரையும் போலீசார் தேடி வருகின்றனர். மயிலாடுதுறை அருகே உள்ள செருதியூர் தோப்புத்தெருவை சேர்ந்தவர் சாம்பசிவம் மகன் சிலம்பரசன்(29). இவர் நேற்றுமுன்தினம் மாலை தனது பைக்கில் மயிலாடுதுறை வந்தவர் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடத்திற்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை இரண்டு பேர் திருடிச்சென்றது தெரியவந்தது. அப்போது அவர் கூச்சல் போடவே, பேருந்துநிலையம் எதிரில் நின்றுகொண்டிருந்த ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் விரட்டிச்சென்று பைக்குடன் இருவரையும் பிடித்தனர். பிடிபட்ட நபர்கள், வாகனத்திற்கு தவணை கட்டவில்லை, அதனால் இதை நாங்கள் எடுத்தோம் என்று கூறினர்.

இதுகுறித்து சிலம்பரசன் கூறுகையில், நான் எந்த வங்கியிலும் கடனே வாங்கவில்லை, சொந்தப்பணத்தில் வாங்கினேன் என்று கூறினார். அந்த சமயத்தில் நீடூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பைக் திருடர்களுக்கு ஆதரவாக பேசினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பைக் திருடியவர்களில் ஒருவர் அங்கிருந்து நைசாக தப்பியோடிவிட்டார். மேலும் இருவரும் கச்சேரி சாலையில் ஒரு பைக்கை திருடுவதற்கு முயன்றதும், அந்த பைக்கை திருடும் முயற்சியை கைவிட்டுவிட்டு இங்கே வந்து சிலம்பரசனின் பைக்கை திருடியதும் தெரியவந்தது. பின்னர் பிடிபட்ட நபரை மயிலாடுதுறை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று ஒப்படைத்தனர்.

விசாரணையில் பிடிபட்ட நபர் சென்னை புதியவண்ணாரப்பேட்டை சிறியன் மெயின்ரோடு தெரு முகம்மதுஉசேன் மகன் ஹாஜிமுகைதீன்(34) என்பதும், அவருடன் வந்தவர் (தப்பியோடியவர்) சென்னையை சேர்ந்த ரகமத்துல்லா என்றும் தெரியவந்தது. திருடிய பைக்கை பறிமுதல் செய்து ஹாஜிமுகைதீனைக் கைதுசெய்து காவலில் அடைத்தனர். ஹாஜிமுகைதீன் மற்றும் ரகமத்துல்லாவையும் சென்னையிலிருந்து வரவழைத்து தங்குவதற்கு இடம் கொடுத்த நீடூரை சேர்ந்த நபர் மீதும் வழக்குப் பதிவுசெய்து இருவரையும் போலீசார் தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : bike thief ,Mayiladuthurai ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...