×

முதலைப்பட்டியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும்

நாமக்கல், டிச.3: நாமக்கல் நகராட்சி 4 மற்றும் 20வது வார்டில் அதிமுக சார்பில், இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து பாஸ்கர் எம்எல்ஏ பேசியதாவது: கடந்த 10 ஆண்டில் நாமக்கல் நகரில் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளேன். போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில், பயணியர் மாளிகை சுற்றுச்சுவரை இடித்து சாலை அகலப்படுத்தப்பட்டது. கோட்டை பகுதியில் அசுத்தமான 2 குளங்களை சீரமைத்து, தூர்வாரி அழகு படுத்தப்பட்டு உள்ளது. கொண்டிசெட்டிப்பட்டி ஏரி ₹5 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது. ஏரியை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் அமைக்கப்பட உள்ளது. 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட நல்லிபாளையம் ஏரியை ₹75 லட்சத்தில் சீரமைக்க திட்டமிடப்பட்டு, முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. கொசவம்பட்டி ஏரி ₹50 கோடியில் சீரமைக்கப்படுகிறது. நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வுகாண, நாமக்கல் நகரில் ரிங் ரோடு அமைக்கும் பணி விரைவில் துவங்கப்படும்.

மேலும், முதலைப்பட்டியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க அடிக்கல் நாட்டு விழா, சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெறும். சேலம் ரோடு, திருச்சி ரோடு தலா ₹15 கோடியில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. நாமக்கல் நகராட்சியுடன் இணைக்கப்பட்ட 9 ஊராட்சிகளுக்கு, விரைவில் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. புதிய குடிநீர் திட்டப்பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இவ்வாறு பாஸ்கர் எம்எல்ஏ தெரிவித்தார்.கூட்டத்தில், நாமக்கல் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சந்திரசேகரன், பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், வீடு கட்டுவோர் கூட்டுறவு சங்க தலைவர் விஜய்பாபு, துணைத்தலைவர் பொரி சண்முகம், நல்லிபாளையம் கூட்டுறவு வங்கி தலைவர் விஜயகுமார், முன்னாள் கவுன்சிலர்கள் வெங்கடேசன், சாதிக்பாட்சா, நகர பொருளாளர் ராஜா, வார்டு செயலாளர்கள் சரவணன், மணி, அதிமுக பிரமுகர் உமாசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : bus stand ,lane ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை