ரூ.444 கோடி மதிப்பில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி துவக்கி வைத்தார்

விருதுநகர், டிச. 3: விருதுநகர்,அருப்புக்கோட்டை, சாத்தூர் நகராட்சிகளுக்கு ரூ.444.71 கோடி மதிப்பிலான தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை நேற்று சாத்தூர் வட்டம் வன்னிமடை,  விருதுநகர் வட்டம் செந்நல்குடி ஆகிய இடங்களில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். பின்னர் அமைச்சர் கூறுகையில், ‘விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர் நகராட்சிகளில் 2.10 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.444.71 கோடியில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. தாமிரபரணி ஆற்றில் தாமிரபரணி- சிற்றாறு நதிகள் கலக்குமிடத்தில் சீவலப்பேரி தடுப்பணைகளுக்கு முன்பு 8 மீ விட்டமுள்ள கிணறு மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு, சீவலப்பேரி சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்து, திருநெல்வேலி மாவட்டம் சில்லான்குளம், விருதுநகர் மாவட்டம் வன்னிமடை, செந்நெல்குடி ஆகிய இடங்களில் அமைய உள்ள இடைநிலை நீரேற்று நிலையங்களில் இருந்து குடிநீர் வழங்கப்படும்.

இதன்மூலம் தினசரி சாத்தூர் நகராட்சிக்கு 29.50 லட்சம் லிட்டர், அருப்புக்கோட்டை நகராட்சிக்கு 125.80 லட்சம் லிட்டர், விருதுநகர் நகராட்சிக்கு 89.50 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படும்’ என்றார். இந் நிகழ்ச்சியில் கலெக்டர் கண்ணன், அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமரன், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், தர்மலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>