×

மாதம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை கோரி மாற்றுத்திறனாளிகள் மறியல் மதுரையில் தள்ளுமுள்ளுவால் பரபரப்பு

மதுரை, டிச. 3: மாதம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை கோரி மதுரை, பேரையூர், உசிலம்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி, தெலுங்கானா மாநிலங்களை போல் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ3 ஆயிரமும், கடும் ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். தனியார் துறை வேலைவாய்ப்பில் 5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். 2013 உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அரசுத்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவு பணியிடங்களை நிரப்பிட வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 125 நாட்களாக கூடுதலாக நாட்களில் வேலை வழங்க வேண்டும். இலவச வீட்டடி மனை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்- பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை வகிக்க, செயலாளர் வீரமணி, பொருளாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இவர்கள் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்தை நோக்கி வந்தனர். அப்போது போலீசார் தடுத்து நிறுத்தியதால் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து போலீசார் அவர்களை வலுக்கட்டயமாக இழுத்து சென்று வேனில் ஏற்றினர். இதனால், போலீசாருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்பு போலீசார் மறியலில் ஈடுபட்ட 35 பேரை கைது செய்தனர். *உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில செயலாளர் முத்துகாந்தாரி, சிபிஎம் ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை வகிக்க, ஒன்றிய தலைவர் நாகராஜன், செயலாளர் சின்னச்சாமி முன்னிலை வகித்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 160 பேரை கைது செய்தனர். *பேரையூர் தாலுகா முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முருகன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் சங்கர் தலைமை வகித்தனர். 173 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags : Madurai ,
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...