×

கரையை நெருங்கும் புரெவி புயல் வெள்ளம் புகும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சுசீந்திரம், டிச. 3 : ஆஸ்டின்  எம்எல்ஏ மாவட்ட கலெக்டர் மற்றும் சிறப்பு அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:  ‘புரெவி’ புயல் 4ம் தேதி கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை  கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டம்  முழுவதும் மழை பெய்யும். பெரு மழையின்போது அணைகளில் இருந்து அதிகமான  தண்ணீரை திறந்து விடும் சூழல் ஏற்படும். அப்போது குடியிருப்புகளுக்குள்  வெள்ளம் புகலாம். மேலும் குளங்களில் உடைப்பு ஏற்படலாம். குறிப்பாக  பழையாற்றின் கரையோரம் உள்ள நங்காண்டி, குக்கல்விளாகம், தெரிசனங்கோப்பு,  திருப்பதிசாரம், நெசவாளர் காலனி, கீரிப்பாறை, ஆண்டித்தோப்பு, சுசீந்திரம்,  பரப்புவிளை, குத்துக்கல், நங்கை நகர், உதிரப்பட்டி, பாலகிருஷ்ணா நகர்,  இந்திரா காலனி, அரிய பெருமாள்விளை காலனி, குளத்துவிளை உள்ளிட்ட தாழ்வான  பகுதிகளில் வெள்ளம் புகுந்து அப்பகுதி பொதுமக்கள் முகாம்களில் தங்க  வைக்கப்படுவது வழக்கம்.

இப்பகுதிகளில் வெள்ளம் புகாதவாறு நிரந்தர  தீர்வு ஏற்படுத்த பலமுறை வலியுறுத்தியும், சட்டமன்றத்தில் பேசியும் இதுவரை  எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த பகுதிகளில் இம்முறையும் வெள்ளம் புகும்  வாய்ப்பு உள்ளதால் அதிகாரிகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க  வேண்டும்.  மேலும் முகாம்களில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு  உணவு உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்ய வேண்டும். இதுபோல கடலோர  பகுதிகளிலுள்ள மக்களையும் உடனடியாக மீட்டு முகாம்களில் தங்க வைக்க  வேண்டும். மேலும் பொதுமக்கள் தேவையான பொருட்களை வாங்கி வைத்து கொள்வதோடு,  புயல், மழை நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

Tags : areas ,coast ,
× RELATED தலைகுந்தா பகுதியில் சாலையோரத்தில் புலி நடமாட்டம்: வீடியோ வைரல்