×

நாகர்கோவிலில் கொலை செய்யப்பட்ட முதியவரை அடையாளம் காண பிச்சைக்காரர்களிடம் விசாரணை

நாகர்கோவில், டிச.3:  நாகர்கோவிலில் முதியவரை நடுரோட்டில் அடித்து கொன்ற வடமாநிலத்தை சேர்ந்தவரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் உள்ள கடைகளில் பிச்சை எடுப்பதில் நேற்று முன் தினம் இரண்டு முதியவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஒருவர், மற்றொருவரை உருட்டுக்கட்டையால் சரமாரியாக அடித்து கொன்றார். நடுரோட்டில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்ததும், வடசேரி போலீசார் சென்று, கொலை செய்த நபரை காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் உத்திரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் (60) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். பிரகாஷ், இந்தியில் பேசியதால், இந்தி தெரிந்த நபரை வரவழைத்து விசாரணை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்தனர். அப்போது பிரகாஷ் கூறியதாவது :நான் உத்திரகாண்ட் மாநிலம் டேராடூன் காந்தகார் பகுதியை சேர்ந்தவன். எனது தந்தை பெயர் உமேஷ். நான் இளைஞராக இருக்கும் போதே எனது பெற்றோர் இறந்து விட்டனர். இதனால் நான் சாதுவாக கோயில்களில் அலைந்து, திரிந்து வந்தேன். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முக்கிய கோயில்களுக்கு செல்வேன். கொரோனாவுக்கு முன், நான் கன்னியாகுமரி வந்தேன். கன்னியாகுமரியில் யாசகம் பெற்று சாப்பிட்டு  வந்தேன். இங்குள்ளவர்கள் என்னை மிகவும் சோதித்து விட்டனர். என்னிடம் இருந்த ரூ.7 ஆயிரம் பணம், ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை திருடி விட்டனர். நாகர்கோவில் வந்து கடைகளில் நான் யாசகம் பெற்றேன். அப்போது அங்கு வந்தவர் எனக்கு பணம் கொடுக்க கூடாது என கூறினார். நான் செல்லும் கடைகளுக்கு வந்து அவரும் பிச்சை கேட்டு, எனக்கு பணம் தருவதை தடுத்தார். இதனால் ஆத்திரத்தில் அடித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து பிரகாசை போலீசார் கைது செய்தனர். பின்னர் நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆனால் இறந்தவர் பற்றி எந்த தகவலும் தெரிய வில்லை. அவர் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே அமர்ந்து பிச்சை எடுத்துக் ெகாண்டு இருந்தவர் ஆவார். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள மற்ற பிச்சைகாரர்களிடமும், வடசேரி, அண்ணா பஸ் நிலையம் உள்ளிட்ட பிற இடங்களில் இருக்கும் பிச்சைக்காரர்களிடமும் இறந்தவர் பற்றிய விபரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்தவரின் புகைப்படத்தை மற்ற காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்தும் விசாரணை நடக்கிறது.

Tags : Nagercoil ,
× RELATED நள்ளிரவு வரை வந்திறங்கிய வாக்கு பெட்டிகள்