×

ஏர்கலப்பை பேரணி நடத்திய காங்கிரஸ் கட்சியினர் கைது

திருப்பூர், டிச.3: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஏர்கலப்பை பேரணி நடத்தி வருகின்றனர். அதன்படி,  திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து, ஏர்கலப்பை பேரணி துவங்குவதாக காங்கிரஸ் கட்சியினர் அறிவித்திருந்தனர். நேற்று காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமையில் திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஏர்க்கலப்பை பேரணியை துவங்கினர். இப்பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்திருந்த நிலையில், பேரணியில் கலந்து கொண்ட மாவட்ட துணைத்தலைவர்கள் ராமசாமி, ஈஸ்வரன், பொதுச்செயலாளர் ரத்தினசாமி, வட்டார தலைவர் கருப்பசாமி, மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் தீபிகா, சகாயமேரி உள்ளிட்ட  100 பேரை வடக்கு போலீசார் கைது செய்தனர்.

காங்கயம்: காங்கயம்-கோவை சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் நடந்த ஏர் கலப்பை பேரணிக்கு மாவட்ட தலைவர் கோபி தலைமை தாங்கினார். இதில், விவசாய தொழிலாளர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் வகையில் மத்திய பா.ஜ. அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்துவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி பேரணி நடந்தது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில துணைத்தலைவர் சித்திக், திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் பண்டுபாய், காங்கயம் நகர காங்கிரஸ் தலைவர் சிபக்கத்துல்லா, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சரவணன், இளைஞர் காங்கிரஸ் அவுட்ரீச் துறை தலைவர் சாதுல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தாராபுரம்: தாராபுரம் காந்தி சிலை அருகே நேற்று நடைபெற்ற பேரணிக்கு மாவட்டத் தலைவர் தென்னரசு தலைமை வகித்தார். விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்தும், விவசாயிகளின் இன்றைய பரிதாப நிலை குறித்தும் அவர் பேசினார். இதைத்தொடர்ந்து, காந்தி சிலையில் இருந்து வடகரை காமராஜபுரம் வரை ஏர்கலப்பைகளை தோளில் சுமந்தவாறு பேரணியாக செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.இதில், தாராபுரம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. காளிமுத்து, மாநில மனித உரிமை அமைப்பின் பொதுச்செயலாளர் செல்வராணி, வட்டார பொறுப்பாளர் முத்துக்குமார், நகர செயலாளர் செந்தில்குமார், அசோக் உட்பட 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Congressmen ,
× RELATED சேரி மொழி பேச்சுக்கு வருத்தம்...