மாவட்டத்தில் கிளப்புகளில் பல கோடி ரூபாய் சூதாட்டம்

ஈரோடு,  டிச.3:  ஈரோடு மாவட்டத்தில் 60க்கும்  மேற்பட்ட மனமகிழ் மன்றம் (கிளப்புகள்) மாவட்ட நிர்வாகத்தின்  அனுமதியின் பேரில், நடந்து வருகிறது. இதில், பெரும்பாலான கிளப்புகளை  விதிமுறைகளை மீறி தற்போது பணம் வைத்து சூதாடும் கிளப்பாக மாற்றி விட்டனர்.  இந்த கிளப்புகளில் தினமும் பல கோடி ரூபாய்க்கு சூதாட்டம் நடந்து  வருகிறது. இரட்டிப்பு பணத்திற்கு ஆசைப்பட்டு, சீட்டாட்டம் விளையாடி பலர்  லட்சக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர். இது குறித்து புகார்கள் வந்தும், மாவட்ட  காவல் துறை இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதில், ஈரோடு,  கோபி, பெருந்துறை, பவானி, சத்தி போன்ற 5 சப்-டிவிசன் பகுதிகளில் ஏராளமான  கிளப்புகளை ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களும், அவரது ஆதரவாளர்களும் எவ்வித  அனுமதி இன்றி, சட்ட விரோதமாக நடத்தி வருகின்றனர். அவர்களிடம் அப்பகுதி  போலீசார் உரிய மாமூலை பெற்றுக்கொண்டு கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர்.  எனவே, ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வோர்  மீது ஈரோடு எஸ்பி., தங்கதுரை நடவடிக்கை எடுத்து, லாட்டரி விற்பனையை  கட்டுக்குள் கொண்டு வந்தார். அதேபோல, மாவட்டத்தில் உள்ள சூதாட்ட  கிளப்புகளையும் முழுமையாக ஒழிக்க எஸ்பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories:

>