×

திருச்செங்கோடு நகராட்சியில் கடை வாடகையை செலுத்த 10 நாள் கெடு

திருச்செங்கோடு, டிச.2: 10 நாளில் கடை வாடகையை செலுத்த திருச்செங்கோடு நகராட்சி நிர்வாகம் கெடு விதித்துள்ளதால் வியாபாரிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். திருச்செங்கோடு நகராட்சி சார்பில் புதிய பஸ் நிலையம் பகுதியில், 74 கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.  கடந்த ஓராண்டுக்கு முன்பு கடை வாடகையை 200 சதவீதம் உயர்த்தி, நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. மேலும், வாடகைக்கு ஜிஎஸ்டி தொகையையும், வியாபாரிகளே கட்டி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த 7 மாதங்களாக புதிய பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வரவில்லை. இதனால், கடைகளில் வியாபாரம் முற்றிலுமாக இல்லாமல், வியாபாரிகள் பெரிதும் நஷ்டத்திற்குள்ளாகினர். மேலும், கடைகள் பூட்டப்பட்டிருந்ததால், உள்ளே வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் காலாவதியாகி, வீணாகி போனது.

தற்போது 20 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதால் வியாபாரம் நலிவுற்ற நிலையில் உள்ளது. வாழ்வாதாரத்தை தக்க வைக்கவே கடை வருவாய் போதவில்லை. எனவே, ஊரடங்கு காலம் முழுவதற்குமாக, கடை வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், வாடகை கட்ட இயலாத கடைகள் மீது, நகராட்சி நிர்வாகம் ஜப்தி நடவடிக்கை எடுக்கக்கூடாது என நகராட்சி ஆணையாளர்(பொ) குணசேகரனிடம், நேற்று 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கோரிக்கை மனு வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட ஆணையாளர், இரண்டு நாட்களுக்குள் மார்ச் மாதம் வரையிலான வாடகை நிலுவையை கட்ட வேண்டும் என்றார். இதனால், அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் தங்களால் வாடகையை கட்ட முடியாது என்றும், மேலும் ரத்து செய்யாவிடில், தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறுவழி இல்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர். சிறிது நேரத்துக்கு பின், வாடகை நிலுவையை கட்ட ஆனையாளர் குணசேகரன், 10 நாட்கள் அவகாசம் வழங்கினார். இதையடுத்து வேறு வழியின்றி வியாபாரிகள், அங்கிருந்து வெளியேறினர்.


Tags : Tiruchengode Municipality ,
× RELATED சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு