×

அன்னவாசல் ஒன்றியத்தில் நடந்த முகாம்களில் 9,736 பேருக்கு கண்பரிசோதனை

புதுக்கோட்டை, டிச.2: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்ட கண் பரிசோதனைக்கான ஒளிமயமான வாழ்வு முகாமினை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்து, பார்வையிட்டார். அப்போது அவர் பேசியதாவது: ஒவ்வொருவருக்கும் கண்பார்வை என்பது மிகவும் முக்கியமானதாகும். பொதுமக்களுக்கு கண்களில் ஏற்படும் குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிந்து சரிசெய்யும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் கண் பரிசோதனைக்கான மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றையதினம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், வீரப்பட்டி, வெள்ளாஞ்சார், வெட்டுக்காடு, புங்கினிப்பட்டி, இருந்திராப்பட்டி ஆகிய கிராமங்களில் கண் பரிசோதனைக்கான ஒளிமயமான வாழ்வு முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் பொதுமக்களுக்கு கண்களில் ஏற்படும் குறைபாடுகள் குறித்து பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் பயனாக பொதுமக்களுக்கு ஏற்படும் கண் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும்.

மேலும் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் இதுவரை நடத்தப்பட்ட முகாம்களில் மொத்தம் 9,736 நபர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களின் 3,789 நபர்களுக்கு கண் கண்ணாடி தேவையென கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களுக்கு விலையில்லா கண் கண்ணாடிகள் வழங்கப்பட உள்ளது. இதேபோன்று 1,156 நபர்களுக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய தேவையென கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் இருப்பிடங்களிலேயே நடைபெற்று வரும் ஒளிமயமான வாழ்வு முகாமினை அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இவ்வாறு தெரிவித்தார்.முகாமில் பொது சுகாதாரத் துணை இயக்குநர் மரு.கலைவாணி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் டெய்சிக்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Eye examination ,camps ,
× RELATED 1.33 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து