அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர், டிச.2:  திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. 29வது வார்டுக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் பிச்சம்பாளையம் புதூரில் நடைபெற்றது. வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. விஜயகுமார் தலைமை வகித்தார். 29வது வட்ட கழக செயலாளர் கனகராஜ் வரவேற்றார். இதில், திருப்பூர் மாநகர் மாவட்ட  செயலாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது: திருப்பூர் மாநகரில், 2 பஸ் நிலையங்கள், பல கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த மார்க்கெட் வளாகம், இரண்டு பெரிய பாலங்கள் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மருத்துவக் கல்லூரி வேண்டும் என கேட்டீர்கள்.

முதல்வர் பழனிசாமி, தற்போது கொடுத்திருக்கிறார்.  எம்.எல்.ஏ.க்கள் விஜயகுமாரும், குணசேகரனும் முதல்வரிடம் பேசி, மேட்டுப்பாளையம் மற்றும் பவானி ஆற்றுநீரை திருப்பூர் கொண்டு வந்துள்ளனர். இப்பணி தற்போது துரிதமாக நடந்து வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பயன்பாட்டுக்கு வந்து விடும். தமிழகத்துக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கிடைக்க, வரும் தேர்தலில் தமிழக முதல்வராக பழனிசாமியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். கட்சியின் நம்பிக்கைக்கு உரியவர்களை பூத் கமிட்டி உறுப்பினர்களாக நியமிப்பது உட்பட, தேர்தல் பணிகளை இன்னும் ஒரு வார காலத்துக்குள் கட்சிக்குள் செய்து முடிக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி நந்தினியின் படிப்புக்கு ரூ.10 ஆயிரத்தை கனகராஜ் வழங்கினார். இதில் அமைப்பு செயலாளர் சிவசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>