×

பாழாய்போன வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள்

கோவை, டிச. 2: கோவை மாநகராட்சி சிங்காநல்லூர் சட்டமன்ற  தொகுதி  64-வது வார்டு உழவர் சந்தை அருகே ஹவுசிங் யூனிட் அடுக்குமாடி  குடியிருப்பு உள்ளது. இது, 17.55 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. தமிழ்நாடு  வீட்டு வசதி வாரியம் சார்பில்  960 அடுக்குமாடி குடியிருப்புகள்  கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகள் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு  வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு, மக்கள் பணம் கொடுத்து  வாங்கியுள்ளார்கள்.  ஆனால் குறுகிய காலத்திற்குள்ளாகவே இந்த வீடுகள்  அனைத்தும் சிதிலமடைந்து, பாழடைந்து, எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து  விழும் அபாய நிலையில் உள்ளது. இந்த வீடுகளை, சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கார்த்திக் நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர், நிருபர்களிடம் கூறியதாவது: கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் பழுதடைந்துள்ள  வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என தமிழக துணை முதல்வர்  அறிவிப்பு வெளியிட்டு, சுமார் ஒரு வருடம்  ஆகியும், இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாழடைந்த  வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகளாக கட்டி, அதே மக்களுக்கு ஒப்படைப்பதற்கு   முனைப்பு காட்டாமல், அரசு தாமதப்படுத்தி வருவது, மக்களை உதாசீனப்படுத்துவதாகும். பாதிக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை மதித்து, காலதாமதம் இன்றி, அதே இடத்தில் புதிய வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும். கட்டுமான பணி முடியும்வரை, தற்காலிக வீடுகள் அமைத்து கொடுக்க வேண்டும். இவ்வாறு கார்த்திக் எம்.எல்.ஏ. கூறினார். ஆய்வின்போது, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் உமாமகேஸ்வரி, சிங்கை சிவா, திராவிடமணி, சிங்கை குணா, மனோகர், ஹட்கோ ஜெயராமன், சுந்தரலிங்கம், சிங்கை சவுந்தர், நாகராஜ், ராமு மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags : Housing Board Apartments ,
× RELATED சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களில் பேட்டரி திருடிய 3 பேர் கைது