×

கீழ்பவானி வாய்க்காலில் காங்கிரீட் தளம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

ஈரோடு, டிச. 2:   கீழ்பவானி வாய்க்காலில் காங்கிரீட் தளம் அமைக்க பாசன விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கீழ்பவானி பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் துளசிமணி, தமிழக விவசாயிகள் சங்க மாநில கவுரவ தலைவர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்துக்குப்பின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி நிருபர்களிடம் கூறியதாவது: பவானிசாகர் அணையும், கீழ்பவானி வாய்க்காலும் முற்றிலும் மண்ணால் கட்டப்பட்டது. அணை மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வருகிறது.

வாய்க்காலில் தற்போது 2,300 கன அடி நீர் மட்டுமே திறக்க முடியும். இந்நிலையில் கீழ்பவானி வாய்க்கால் விரிவாக்குதல், புதுப்பித்தல், நவீனப்படுத்தும் பணி குறிப்பாக வாய்க்கால் முழுவதும் கான்கிரீட் தளம் அமைக்க பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக டெண்டர் கோரி உள்ளனர். காங்கிரீட் தளம் அமைத்தால், நிலத்தடி நீராதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். பாசன உரிமை பறிபோகும். வாய்க்கால் விரிவாக்கத்திற்காக பல லட்சம் மரங்கள் வெட்டப்பட வேண்டிய நிலை ஏற்படும். எனவே இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று பொதுப்பணித்துறையை கேட்டுக்கொள்கிறோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ.1,450 கோடி செலவில் இதே திட்டத்தை அறிவித்திருந்தார்.

ஆனால் விவசாயிகள் எதிர்ப்பால் கைவிட்டார். அரசுக்கு ஆதரவான சில பாசன சங்கங்கள், இத்திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் பெரும்பாலான விவசாய சங்கங்கள், பாசன சபைகள் எதிர்ப்பதால், இத்திட்டத்தை கைவிட வேண்டும். கீழ்பவானி முதல் போகத்துக்கு வருகின்ற 15ம் தேதி நீர் நிறுத்தப்படும். இதனை வருகிற 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். மேலும் இரண்டாம் போக நீர் திறப்பை முன்கூட்டியே அறிவித்தால், விவசாயிகள் ஆயத்தப்பணிகளை மேற்கொள்ள எளிதாகும். டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பிரதமர் பேசி தீர்வு காண வேண்டும் இவ்வாறு நல்லசாமி கூறினார்.

Tags : canal ,Kizhpavani ,
× RELATED கீழ்பவானியில் தண்ணீர் எடுத்த லாரி பறிமுதல்