×

பெண் வட்டார வளர்ச்சி அலுவலரை தாக்க முயன்ற பாஜகவினரை கண்டித்து 4 இடங்களில் ஊரக வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், டிச. 2: பெண் வட்டார வளர்ச்சி அலுவலரை தாக்க முயன்ற பாஜகவினரை கண்டித்து பெரம்பலூர் மாவட்டத்தில் 4 ஒன்றிய அலுவலகங்கள் முன் ஊரக வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியத்தின் பெண் வட்டார வளர்ச்சி அலுவலரை தாக்க முற்பட்டும், போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அலுவலக சொத்துகளுக்கு சேதம் விளைவித்தும், வட்டார வளர்ச்சி அலுவலரின் ஜீப்பின் கதவை உடைத்தும், ஜீப்பின் முகப்பில் பொருத்தப்பட்டிருந்த தமிழ்நாடு அரசு முத்திரையை காலால் எட்டி உதைத்தும் அராஜக செயல்களில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்களை கைது செய்யக்கோரி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஒன்றிய அலுவலகங்கள் முன் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மரியதாஸ் தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயபால், ராஜேந்திரன், பானுமதி மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட 45 பேர் பங்கேற்றனர். வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கம், பிரேமா கார்த்திகாயினி, பன்னீர்செல்வம் உள்ளிட்ட 48 பேர் பங்கேற்றனர்.

வேப்பூர் ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வேப்பூர் வட்டக்கிளை பொறுப்பாளரான துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில், ஸ்டாலின் செல்வக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனலட்சுமி, ஜெயபால், சட்டநாதன் உட்பட 40 பேர் பங்கேற்றனர். ஆலத்தூர் ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆலத்தூர் வட்ட கிளை பொறுப்பாளரான துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், முரளி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், வாசுகி உட்பட 37 பேர் பங்கேற்றனர்.

Tags : places ,development officer ,BJP ,
× RELATED வாணியம்பாடியில் பணப்பட்டுவாடா!:...