×

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோரிடம் லஞ்சம் பெற்றதாக மதகரம் ஊராட்சி தலைவரை கண்டித்து மக்கள் முற்றுகை

வலங்கைமான், டிச.2: வலங்கைமான் அடுத்த மதகரம் ஊராட்சியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அடையாளம் காணும் பணியின்போது பயனாளிகளிடம் லஞ்சம் பெற்றதாக ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த மதகரம் ஊராட்சியில் தமிழக அரசின் புத்தாக்க திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள பயனாளிகளை அடையாளம் காண்பதற்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு வருகிறது. இப்பணிகள் மகளிர் திட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதிமுகவை சேர்ந்த மதகரம் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சையம்மாள் சதாசிவம் பயனாளிகளிடம் தல விண்ணப்பத்திற்கு 100 ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது .

கடந்த 10 தினங்களுக்கு மேலாக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சுமார் 250க்கும் மேற்பட்ட பயனாளிகளிடம் கணக்கெடுக்கும் பணி முடிவுற்று உள்ளது. இதில் ஒருசிலரிடம் பணம் பெறாமலும், பலரிடம் தலா ரூ.100 வசூல் செய்ததாக கூறப்படுகிறது. விண்ணப்பப்படிவம் பெறுவதற்கு லஞ்சம் பெறும் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை நேற்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டனர். சம்பவ இடத்திற்கு ஒன்றிய ஆணையர்கள் யாரும் வராத நிலையில் ஊராட்சி செயலாளர் மட்டுமே சம்பவ இடத்திற்கு வந்தார். மேலும் வலங்கைமான் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். மேலும் ஊராட்சி மன்ற தலைவரிடம் இருந்து அந்த விண்ணப்பங்கள் கைப்பற்றப்பட்டது. முன்னதாக பணம் பெற்ற பயனாளிகளிடம் பணத்தை திரும்பி அளிக்கும்படி கூறப்பட்டது. ஊராட்சி மன்றத்தில் போதிய நிதி இல்லாததால் அவற்றை சமாளிப்பதற்கு இதுபோன்ற தவறுகள் நடப்பதாக கூறப்படுகிறது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : siege ,panchayat leader ,locals ,
× RELATED அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் ஊராட்சி...