×

திருச்செந்தூரில் நிறைவுறும் வேல் யாத்திரை நடத்த ஆதரவும், எதிர்ப்பும்

தூத்துக்குடி, டிச.1: தூத்துக்குடி மாவட்டத்தில் வேல் யாத்திரை நடத்த அனுமதி அளிக்கக் கோரி இந்து இளைஞர் முன்னணியினரும், அனுமதி வழங்கக் கூடாது என  பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினரும் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்ததால் பரபரப்பு நிலவியது.  தமிழகம் முழுவதும் பாஜ சார்பில் வேல் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இந்த யாத்திரையின் நிறைவுவிழா வரும் 5ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெற உள்ளது. இதில் தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த யாத்திரைக்கு அனுமதி அளிக்ககோரி  தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்த தூத்துக்குடி இந்து இளைஞர் முன்னணி பொறுப்பாளர் ராகவேந்திரா தலைமையிலான நிர்வாகிகள் இதுகுறித்த மனுவை கலெக்டர் செந்தில்ராஜிடம் அளித்தனர்.

 அதே வேளையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தியும் தூத்துக்குடி மாவட்ட பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் கலெக்டரிடம் மனு கொடுத்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.
 இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த மைதீன்கனி, ஜாகீர்உசேன், தாஸ் உள்ளிட்டோர் கலெக்டரிடம் அளித்துள்ள மனு விவரம்: பாஜ நடத்தும் வேல் யாத்திரை சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாகவும், சகோதரத்தன்மையை குலைக்கும் வகையில் உள்ளது. எனவே, வரும் 5ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வேல் யாத்திரை வரவுள்ள நிலையில், இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க கூடாது. மேலும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலான இதுபோன்ற பேரணிகளை மாவட்டத்தில் அனுமதிக்க கூடாது என்று  அதில் தெரிவித்துள்ளனர். மனு கொடுக்கும் நிகழ்ச்சியில், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலாளர்கள் மாரிச்செல்வம், கிதர் பிஸ்மி, எஸ்டிபிஐ நிர்வாகி ஹசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



Tags : Vail Yatra ,Thiruchendur ,
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...