×

கொரோனா ஊரடங்கில் தொடர்ந்து தளர்வு ஏற்காடு மான் பூங்கா, முட்டல் நீர் வீழ்ச்சி நாளை திறக்க ஏற்பாடு

சேலம், டிச.1: கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதன்படி, மாதந்தோறும், சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து வந்துள்ளனர். தற்போது, தமிழகத்தில் கொரோனா பரவல் பெருமளவு குறைந்திருப்பதால், ஊரடங்கு தளர்வு அதிகளவு வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஜவுளி, நகைக்கடைகள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் வழக்கம் போல் இயங்க தொடங்கியுள்ளது. கடந்த 10ம் தேதியில் இருந்து தியேட்டர்களும், வன உயிரியல், பொழுது போக்கு பூங்காக்கள் திறக்கப்பட்டது. மேலும், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பால், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏற்காடு மான் பூங்கா, கரடியூர் வியூ பாயிண்ட், ஆத்தூர் ஆணைவாரி முட்டல் நீர்வீழ்ச்சி ஆகியவற்றை திறப்பதற்கான ஆயத்தப்பணிகளை அதிகாரிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். கடந்த 6 மாதத்திற்கும் மேலாக பூட்டிக் கிடந்ததால், சுற்றுலா பயணிகள் வருகையின் போது. போதிய வசதிகள் இருக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த மாதம் ஊரடங்கில், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது சேலத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா, பொதுப்பணித்துறை, தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களும் திறக்கப்பட்டது. தற்போது, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏற்காடு மான் பூங்கா, கரடியூர் வியூ பாயிண்ட் மற்றும் ஆணைவாரி முட்டல் ஆகியவற்றை வரும் நாளை (புதன் கிழமை) திறப்பதற்கான  பணிகள் நடந்து வருகிறது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவித்தன் மூலம் ஏற்காடு மான் பூங்கா, கரடியூர் வியூ பாயிண்ட் மற்றும் ஆணைவாரி முட்டல் நீர்வீழ்ச்சி ஆகியவற்றை வரும் புதன் கிழமை (நாளை)  திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை வாரந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வரும் புதன் கிழமை முதல் திறக்கப்படும். இந்த சுற்றுலா இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றலா பயணிகள் அனுமதிக்கப்படுவர்.  பயணிகள் கட்டயாம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும், சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க தேவையான நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளது,’ என்றனர்.

சேலத்தில் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு
சேலம், டிச.1: சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக  குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 59 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சேலம் மாவட்டம் மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்த 59 பேரும், சேலம் மாநகர பகுதிகளில் 7 பேரும், சேலம் சுகாதார மாவட்டத்தில் 16 பேரும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் ஒருவரும், மேட்டூர் நகராட்சியில் 2 பேரும் அடங்குவர். அதேபோல் செங்கல்பட்டு, தர்மபுரி, நாமக்கல், கோவை மாவட்டத்தில் இருந்து சேலம் வந்த 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29,857 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மாவட்டத்தில் 28,897 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 439 பேர் பலியாகியுள்ளனர். 521 பேர் மருத்துவமனை, சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தர்மபுரியில் 11 பேர், கிருஷ்ணகிரியில் 9 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Yercaud Deer Park ,curfew ,Corona ,Stupid Water Fall ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...