×

டிப்போவில் இருந்து பஸ் எடுக்க அனுமதி கேட்ட அரசு பஸ் டிரைவரை ஆபாசமாக பேசிய அதிமுக தொழிற்சங்க நிர்வாகி வாட்ஸ் அப்பில் வைரலாகும் ஆடியோ

சேலம், டிச.1:சேலம் அடுத்த வாழப்பாடி டிப்போவில் அரசு பஸ் டிரைவரை, அண்ணா தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் ஆபாசமாக பேசும் ஆடியோ வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சேலம் கோட்டத்தில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், சேலம் மண்டலத்தில் மட்டும் 200க்கும் அதிகமான டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. போக்குவரத்து கழக டிப்போக்களில் அதிமுகவைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கோலோச்சும் நிலை காணப்படுகிறது. அதிகாரிகள் உத்தரவு போட்டாலும், அந்த தொழிற்சங்க நிர்வாகிகள் அனுமதித்தால் மட்டுமே, அந்த உத்தரவு செயலுக்கு வருகிறது. இதனிடையே, டிப்போவில் இருந்து பஸ்ஸை எடுக்க அனுமதி கேட்கும் டிரைவரிடம் சக டிரைவர் ஒருவரை, தொழிற்சங்க நிர்வாகி ஆபாசமாக பேசும் ஆடியோ வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. வாழப்பாடி டிப்போவைச் சேர்ந்த ஒரு டிரைவர், டவுன் பஸ்ஸை இயக்க வந்துள்ளார். அதே பஸ்ஸை எடுக்க மேலும் 2 டிரைவர்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதனால், யார் பஸ்சை ஓட்டுவது என கேட்க, அந்த டிப்போவில் அதிகார மிக்கவராக திகழும் தொழிற்சங்க நிர்வாகிக்கு டிரைவர் போன் செய்கிறார். அப்போது, நீயே வண்டியை எடு எனக்கூறிவிட்டு, மற்றொரு டிரைவரை ஆபாசமாக பேசுகிறார்.

தொடர்ந்து, திட்டு வாங்கிய டிரைவரிடம் போன் சென்றபோது, மேலும் சகட்டுமேனிக்கு ஆபாசமாக பேசிவிட்டு, போனை துண்டிக்கிறார். தொழிற்சங்க நிர்வாகியின் இந்த பேச்சுக்கு, அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘கடந்த 10 ஆண்டுகளாக ஆளும்கட்சியைச் சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிகள் சொல்வது தான் சட்டம் என்ற நிலை, அனைத்து போக்குவரத்து கழக டிப்போக்களிலும் நிகழ்ந்து வருகிறது. எங்களைப் போல சாதாரண பணியில் சேரும் அவர்கள், எந்த டூட்டிக்கும் செல்லாமல், மற்றவர்களை மிரட்டி வருகின்றனர். இதனால் கோடிக்கணக்கில் நிதியிழப்பு ஏற்படுவதுடன், தொழிலாளர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. போஸ்டிங் போட, விடுமுறை எடுக்க என அனைத்திற்கும் பணம் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். அதிகாரிகளையும் மீறிய அதிகாரமிக்கவர்களாக திகழ்ந்து வருகின்றனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றாலும், யாரும் கண்டுகொள்வதில்லை,’ என வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags : Watts ,AIADMK ,government bus driver ,depot ,
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...