சொத்தை திருப்பி கேட்ட தந்தைக்கு அடி, உதை 2 மகன்கள் கைது

சேந்தமங்கலம், டிச.1:கொல்லிமலையில் சொத்தை பிரித்து கேட்ட தந்தையை அடித்து உதைத்த மகன்களை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை தேவனூர்நாடு செங்காடு பகுதியை சேர்ந்த  விவசாயி சீரங்கன்(62). இவருக்கு சொந்தமான பூர்வீக சொத்தை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது 4 மகன்களுக்கும் பிரித்து கொடுத்துள்ளார். தற்போது வயது முதிர்வு காரணமாக சீரங்கன் வேலைக்கு செல்ல முடியாததால், பணம் இல்லாமல் சிரமப்பட்டு வந்ததாக தெரிய வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் சீரங்கன் தனது மூத்த மகன் சந்திரகுமார்(39), இளைய மகன் கனகராஜ்(35) ஆகியோரிடம் சென்று தனக்கு ஒரு பகுதி சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளார். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் அண்ணன், தம்பி இருவரும் சேர்ந்து, சீரங்கனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சீரங்கன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வாழவந்திநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து சந்திரகுமார், கனகராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>