×

கிருஷ்ணகிரியில் பரபரப்பு சிஇஓவை அவதூறாக பேசிய ஆசிரியர் பணியிட மாற்றம்

கிருஷ்ணகிரி, டிச.1:கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை, ஆசிரியர்கள் கூட்டத்தில் அவதூறாக பேசிய பட்டதாரி ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி நெடுமருதி அரசு உயர்நிலைப்பள்ளியில், கணித பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அருண். இவர், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மருத்துவ விடுப்பில் இருந்தபோது, பொறுப்பு தலைமை ஆசிரியராக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 26ம் தேதி, பள்ளியில் அனைத்து ஆசிரியர்கள் கூட்டத்தை கூட்டி, அதில் பேசும்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகனை அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து, விசாரணை நடத்திய அதிகாரிகள், அந்த பள்ளியின் ஆசிரியர்கள் அனைவரிடமும், கடந்த 27ம் தேதி நேரடியாக விசாரணை நடத்தி, அவர்களிடம் எழுத்துபூர்வமாக அனைத்து தகவல்களையும் பெற்று கொண்டனர்.

அதன் பின்னர், பட்டதாரி ஆசிரியர் அருண் தான் பேசியது உண்மைதான் என ஒப்புக்கொண்டார். தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகள் 1973ன்படி, உயர் அலுவலரை அவதூறாக பேசி, தன்னுடைய ஆசிரியர் பணிக்கு அவர் களங்கம் ஏற்படுத்தியுள்ளார். அதனடிப்படையில், ஆசிரியர் அருணுக்கு தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கணித பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு நிர்வாக மாறுதல் வழங்கி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இது மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Teacher job change ,CEO ,Krishnagiri ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்