திருச்சி காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் இன்று மாலை முதல் துவங்கும்

திருச்சி, நவ.30: திருச்சி காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் இன்று மாலை முதல் துவங்குகிறது. திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்க கூட்டம் மார்க்கெட் வளாகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் ஏற்பட்ட முடிவின்படி நேற்று (29ம்தேதி) மாலை 6 மணி முதல் வியாபாரம் துவங்குவதாக இருந்தது. எனினும் மராமத்து பணிகள் நிறைவு பெறாததால் கலெக்டரின் அறிவுறுத்தல்படி இன்று (30ம் தேதி) மாலை 6 மணி முதல் வியாபாரத்தை துவக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இன்று காலை 6 மணிக்கு காந்தி மார்க்கெட் மெயின் கேட் திறக்கப்பட்டு வியாபாரிகள் தங்கள் கடைகளுக்கு சென்று மாலை வியாபாரத்தை துவக்குவதற்கான ஆயத்த பணிக்ளை மேற்கொள்ள கலெக்டர் ஒப்புதல் அளித்துள்ளார். ஆகவே இன்று மாலை 6 மணி முதல் காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் முழு வீச்சில் செயல்பட துவங்கும்.

காந்தி மார்க்கெட் வியாபாரிகளும் தொழிலாளர்களும் முக கவசம் அணிந்துகொண்டும் சமூக இடைவெளியை பின்பற்றியும் வணிகம் செய்ய வேண்டும். காந்தி மார்க்கெட்டிற்குள் வரும் சிறு வியாபாரிகள், பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் இரவு 9 மணிக்கு துவங்கி மறுநாள் காலை 5 மணி வரை நடைபெறும். காய்கறிகளை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் காய்கறிகளை இறக்கிவிட்டு அதிகாலை 5 மணிக்குள் வெளியேறி விடவேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சில்லறை வியாபாரம் காலை 5 மணிக்கு துவங்கி பிற்பகல் 2 மணிக்குள் முடித்து விடவேண்டும். பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரை மாநகராட்சி ஊழியர்கள் துப்புறவு பணிகளை மேற்கொள்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அன்றைய வியாபாரம் வரவு, செலவு விபரங்களை பார்த்துகொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களும் இந்த நேர கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து மொத்தம் மற்றும் வியாபாரிகள் சங்கம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு இச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related Stories:

>