×

மாவட்டம் முழுவதும் அரசுத்துறையில் ஏராளமான பணியிடங்கள் நிரப்ப வில்லை

சிவகங்கை, நவ.30:  மாவட்டத்தில் சத்துணவு, கால்நடை, வருவாய், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்படாததால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக சத்துணவுத் துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. கடந்த 2018ம் ஆண்டு தொடக்கத்தில் 150சத்துணவு அமைப்பாளர் பணிக்கு நேர்காணல் அறிவிக்கப்பட்டு பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் 2018ம் ஆண்டு மே மாதம் 150 சத்துணவு அமைப்பாளர், 456 சமையல் உதவியாளர், 38 சமையலர் ஆகிய 644 காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. ஆனால் பணி நியமனம் செய்யப்படாமல் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் 184 சத்துணவு அமைப்பாளர், 442சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அக்.3ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் இப்பணியிடங்கள் நிரப்புவதும் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது மாவட்டம் முழுவதும் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என மொத்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. இதுபோல் மாவட்ட கால்நடைத்துறையில் பராமரிப்பு உதவியாளர், டைப்பிஸ்ட், கால்நடை ஆய்வாளர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடத்திற்கு கடந்த ஆண்டு பிப்ரவரியில் நேர்காணல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் நிர்வாக காரணங்களுக்காக எனக்கூறி நேர்காணலை ரத்து செய்தனர். அதன் பின்னர் இதுவரை அப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை இல்லை.

வருவாய்த்துறையில் தாலுகா அலுவலகங்களில் உதவியாளர் உள்ளிட்ட ஏராளமான பணியிடங்கள் காலியாகவுள்ளன. மாவட்டம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. அரசுத்துறை வாகன ஓட்டுநர் பணியிடங்கள், கல்வித்துறை அலுவலகங்களில் ஊழியர் பணியிடங்கள் என ஒவ்வொரு துறையிலும் பணியிடங்கள் நிரப்புவது கேள்விக்குறியாகி உள்ளது. அரசியல் கட்சியினர் கூறியதாவது:வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு லட்சக்கணக்கானோர் வேலையில்லாமல் உள்ளனர். சத்துணவு, அங்கன்வாடி, கால்நடைத்துறைகளில் பணியிடங்கள் நிரப்புவதில் ஆண்டுக்கணக்கில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர்.

Tags : district ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்