×

ஒட்டன்சத்திரத்தில் 24 மணிநேரமும் செயல்படும் மதுக்கடை குடிமகன்கள் அட்டகாசத்தால் மக்கள் அச்சம்

ஒட்டன்சத்திரம், நவ.30: ஒட்டன்சத்திரத்தில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அச்சத்துடனேயே உள்ளனர். இவற்றை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
ஒட்டன்சத்திரத்தில் 10க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு மதுபானக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒட்டன்சத்திரம், சி.எப்.மருத்துவமனை எதிரில் இயங்கி வரும் தனியார் மதுபான விடுதி எந்நேரமும் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். கடை திறப்பு நேரமான காலை 11 முதல் இரவு 10 மணிவரை உள்ளது. ஆனால் இந்த மதுபானவிடுதியில் அதிகாலை 6 மணி முதலே மதுபானங்கள் படுஜோராக 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.

இதனால் குடிமகன்கள் குடித்துவிட்டு சாலையில் செல்வோரை ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்கின்றனர். மேலும் அருகிலேயே மருத்துவமனை இருப்பதால் அங்கிருந்து வரும் பெண்கள் மற்றும் முதியோர்கள் மெடிக்கல், ஹோட்டல் போன்றவற்றுக்கு வரும்போது சாலையில் அலங்கோலத்தில் படுத்துள்ளனர். மேலும் நகருக்குள் கடைவீதிக்கு வரும் பெண்களிடம் குடிமகன்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் அருகிலேயே காவல் நிலையம், டி.எஸ்.பி. அலுவலகம் உள்ளிட்டவை இருந்தும் இந்த மதுபானக்கடையில் 24 மணி நேரமும் மதுவிற்பனை செய்யப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் அரசு நிர்ணயத்தை நேரத்தில் மதுபான கடைகளை திறந்து, பொதுமக்களுக்கும், பெண்களுக்கும் இடையூறு இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் கூறுகையில், காவல்நிலையம், டிஎஸ்பி அலுவலகம் அருகிலேயே மதுபான கடை 24 மணிநேரமும் செயல்படுவது அதிர்ச்சியாக உள்ளது. இதனால் குடிமகன்கள் அட்டகாசம் தாங்க முடியவில்லை. பெண்கள், குழந்தைகள் சுதந்தரமாக நடந்து செல்ல முடியவில்லை. சில நேரங்களில் குடித்துவிட்டு ரோட்டில் தகராறு செய்வதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே இங்குள்ள மதுபான கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இல்லையென்றால் சரியான நேரத்தில் திறந்து போலீஸ் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்கள் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர்.

Tags : liquor store citizens ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது