பிஏபி கிளை கால்வாய் சீரமைக்க கோரிக்கை

பொள்ளாச்சி, நவ.30: பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் ஆழியார் பாசனத்திட்டத்திற்குட்பட்ட (பிஏபி) ஆழியார் மற்றும் திருமூர்த்தி அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம், பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.

ஆனால், பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் கிராம பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பிஏபி திட்ட கிளை கால்வாய்கள், பல இடங்களில் இன்னும் பழுதாகி சிதிலமடைந்தும், புதர் மண்டிய நிலையில் உள்ளது. இதில், சில கால்வாய்களில் மண், கற்கள் குவிந்து கிடப்பதுடன், பக்கவாட்டு சுவர்கள் உடைந்த  நிலையில் உள்ளது.

இதன்காரணமாக, கிளை கால்வாய்களில் அவ்வப்போது தண்ணீர் திறப்பு இருக்கும் வேளையில், விவசாயத்துக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. கிராம பகுதி வழியாக செல்லும் பிஏபி கால்வாய்களில் பழுதான இடங்களை கண்டறிந்து, அதனை முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகளோ, வாய்க்கால்களை முழுமையாக பராமரிக்காமல் கண்டுகொள்வதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,`பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமம் வழியாக செல்லும் இன்னும் சில பிஏபி கிளை கால்வாய்களில் குறிப்பிட்ட பகுதியை தவிர பெரும்பாலான இடங்களில் பராமரிப்பு பணி இல்லாத நிலை உள்ளது. பழுதடைந்து மற்றும் புதர் மண்டிய கிளை கால்வாய்களின் பல இடங்களில் பக்கவாட்டு சுவர்கள் சேதமடைந்து உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், அணையிலிருந்து கால்வாயில் தண்ணீர் திறப்பு இருக்கும்போது, அதிகளவு தண்ணீர் விரயமாகும்.எனவே, போர்க்கால அடிப்படையில், கிளை கால்வாய்களை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும்’ என்றனர்.

Related Stories:

>