டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் 50 பேர் கைது

திருவண்ணாமலை, டிச.1: டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக, திருவண்ணாமலையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.இந்நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், திருவண்ணாமலையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பஸ் நிலையம் அறிவொளி பூங்கா அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாநில குழு உறுப்பினர் வீரபத்திரன், மாவட்ட செயலாளர் சிவக்குமார், வக்கீல் அபிராமன் உட்பட 50 பேர் கலந்து கொண்டனர்.அதைத்தொடர்ந்து, வேலூர் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட ஊர்வலமாக சென்றனர். அதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

Related Stories: