தண்டராம்பட்டு அருகே ஏரி நீர்வரத்து கால்வாயை தூர்வாரிய விவசாயிகள்

தண்டராம்பட்டு, நவ.30: தண்டராம்பட்டு அருகே ஏரி நீர்வரத்து கால்வாயை விவசாயிகள் ஒன்று சேர்ந்து தூர்வாரி சீரமைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகாவில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 20 ஏரிகளும், கிராம ஊராட்சி கட்டுப்பாட்டில் 46 ஏரிகளும் உள்ளது. எப்போதும் நீரின்றி புதர் மண்டி கிடக்கும் ஏரிகள், நிவர் புயல் ஏற்பட்டபோதும் போதிய மழை பெய்யாததால், ஏரிகளுக்கு நீர்வரத்து இல்லை. இந்நிலையில், தண்டராம்பட்டு அடுத்த ஆத்திப்பாடி ஊராட்சி மலை கிராமங்களான மேல்வலசை, கீழ்வலசையில் பெய்த மழையால் மலையனூர்செக்கடி ஏரி, ரெட்டியார்பாளையம் ஏரி ஆகிய 2 ஏரிகள் மட்டும் நிரம்பியுள்ளது.

ஆனால், மழை வெள்ளம் வழிந்தோடும் வழியில் உள்ள காவேரிப்பட்டினம் தடுப்பணையில் இருந்து மலையனூர்செக்கடி சித்தேரி செல்லும் கால்வாயில் புதர் மண்டி காணப்படுகிறது. எனவே, அப்பகுதி விவசாயிகள் ஒன்று சேர்ந்து நேற்று சித்தேரிக்கு செல்லும் பக்க கால்வாயை தூர்வாரி சீரமைத்தனர். பின்னர், அவர்கள் கூறுகையில், `காவேரிப்பட்டினம் தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்க வேண்டும், சித்தேரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயின் இருபுறமும் சிமென்ட் கான்கிரீட் அமைக்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தில் நீர்வரத்து கால்வாயை தூர்வார வேண்டும்’ என தெரிவித்தனர். தண்டராம்பட்டு தாலுகாவில் எதிர்பார்த்த அளவு மழை இல்லாததால் 64 ஏரிகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் நெல் சாகுபடி செய்ய முடியவில்லை. பருவமழையால் ஏரிகள் நிரம்பும் என விவசாயிகள் காத்து கிடக்கின்றனர்.

Related Stories:

>