×

சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டில் குடும்பத்தினரை தவிக்க விட்டு மாயமான தொழிலாளி

கோவை, நவ.30: திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் சூர்யா (27). ஓட்டல் தொழிலாளி. இவர் மனைவி ஜெனிதா மேரி (23). இவர்களுக்கு 4 வயது மகள், 2 வயது மகன் உள்ளனர். சூர்யா கடந்த சில மாதங்களாக கோவை கருமத்தம்பட்டியில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன் தினம் திருநெல்வேலி செல்வதற்காக மனைவி,குழந்தைகளுடன் சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் வந்தார். குடும்பத்தினரை பஸ்சில் உட்கார வைத்த பின்னர் கடைக்கு சென்று வருவதாக கூறிய சூர்யா வெளியே சென்றார். பின்னர் அவர் வரவில்லை. அவரது குடும்பத்தினர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் தேடினர். அவர் கிடைக்கவில்லை. அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. கணவர் தவிக்க விட்டு சென்றதால் ஜெனிதா மேரி குழந்தைகளுடன் கதறி அழுதார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மாயமான சூர்யாவை தேடி வருகின்றனர்.

ஜெனிதா மேரி போலீசாரிடம், ‘‘ என் கணவர் ஓட்டலில் வேலை செய்து வந்தார். சரியாக வேலை கிடைக்கவில்லை. சொந்த ஊருக்கு சென்று அங்கேயே இருந்து விடலாம் எனக்கூறினார். எங்களை அழைத்து கொண்டு வந்தார். நாங்கள் பஸ்சில் உட்கார்ந்தோம். எங்களை விட்டு சென்றவர் மீண்டும் வரவில்லை. அவருக்கு என்ன பிரச்னை என தெரியவில்லை. எங்களிடம் சொந்த ஊர் செல்வதற்கு கூட பணமில்லை. குழந்தைகள் உணவு சாப்பிடவில்லை. என் கணவர் இப்படி செய்வார் என எதிர்பார்க்கவில்லை, ’’ எனக்கூறி புலம்பினார். குழந்தைகளும் அப்பாவ காணோம். நாங்க ரொம்ப நேரமாக பாத்துக்கிட்டு இருக்கோம். அப்பாவ வர சொல்லுங்க என அழுதனர். போலீசார் ஆறுதல் கூறி அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். சூர்யாவை அவரது செல்போன் எண் வைத்து தேடும் பணி நடக்கிறது. பஸ் ஸ்டாண்டில் குடும்பத்தினரை தவிக்க விட்டு தொழிலாளி மாயமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : bus stand ,Singanallur ,
× RELATED குப்பை கிடங்காக மாறிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: பயணிகள் கடும் அவதி