வழக்கு விவரங்களை பெறுவதற்கு சென்ற பெண் எஸ்ஐயை விரட்டியடித்த வருவாய் ஆய்வாளர் மீது வழக்கு: அண்ணாநகரில் பரபரப்பு

அண்ணாநகர்: இளம்பெண் தற்கொலை வழக்கு தொடர்பான விவரங்களை பெறுவதற்கு சென்ற பெண் எஸ்ஐயை ஒருமையில் திட்டி விரட்டியடித்த வருவாய் ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அண்ணாநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. அடையாறு சாஸ்திரி நகரை சேர்ந்த ஹரிஷ் மனைவி நிஷா (22), குடும்ப தகராறு காரணமாக கடந்த 25ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமான ஒன்றரை வருடத்தில் நிஷா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்கொலை தொடர்பாக ஆர்டிஓ விசாரணையில் கிடைத்த விவரங்களை பெற, சாஸ்திரி நகர் காவல் நிலைய பெண் எஸ்ஐ பாரதி, கடந்த சில நாட்களுக்கு முன் கிண்டி ஆர்டிஓ அலுவலகம் சென்றார். அங்கு, ‘‘நிஷா சடலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதால், திருமங்கலம் ஆர்டிஓ அலுவலகத்தில் விசாரியுங்கள்,’’ எனக்கூறி திருப்பி அனுப்பியுள்ளனர். இதையடுத்து, கடந்த 27ம் தேதி திருமங்கலம் ஆர்டிஓ அலுவலகத்துக்கு சென்ற பெண் எஸ்ஐ, அங்கிருந்த வருவாய் ஆய்வாளர் மணிவண்ணனிடம், வழக்கு சம்பந்தமான ஆவணங்களை கேட்டுள்ளார்.

ஆனால், பல மணி நேரம் அவரை காக்க வைத்த  வருவாய் ஆய்வாளர், ‘‘இந்த வழக்கு இங்கு வராது. நீ கிண்டி ஆர்டிஓ அலுவலகத்துக்கு போ,’’ என ஒருமையில் கூறியுள்ளார். ‘‘இதை அப்போதே கூறி இருக்கலாமே, எதற்கு இவ்வளவு நேரம் காத்திருக்க வைத்தீர்கள்,’’ என பெண் எஸ்ஐ கேட்டபோது, அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, அங்கிருந்து செல்லும்படி விரட்டியுள்ளார். இதையடுத்து, கிண்டி ஆர்டிஓ அலுவலகம் சென்றபோது, அங்கிருந்தவர்கள் ‘‘திருமங்கலம் ஆர்டிஓ அலுவலகத்தில்தான் வழக்கு விவரம் கிடைக்கும். இங்கு எந்த தகவலும் இல்லை,’’ என கூறியுள்ளனர்.

அதன்படி, பெண் எஸ்ஐ மறுநாள் மீண்டும் திருமங்கலம் ஆர்டிஓ அலுவலகம் சென்று, வருவாய் ஆய்வாளர் மணிவண்ணனிடம், வழக்கு தொடர்பான விவரங்களை கேட்டிருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த அவர், பொதுமக்கள் முன்னிலையில், பெண் எஸ்ஐயை ஒருமையில் திட்டி விரட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் எஸ்ஐ, இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். மேலும், தன்னை ஒருமையில் பேசி மன உளைச்சலை ஏற்படுத்தியதாக வருவாய் ஆய்வாளர் மணிவண்ணன் மீது திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, வருவாய் ஆய்வாளர் மணிவண்ணனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கு விவரங்களை பெற சென்ற பெண் எஸ்ஐயை வருவாய் ஆய்வாளர் விரட்டியடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>