×

கரூர் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை முறையாக சுத்தம் செய்த பின்னர் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை

கரூர், நவ. 30: கரூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் தேங்காமல் இருக்கவும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை முறையாக சுத்தம் செய்த பிறகு குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் மற்றும் குளித்தலை நகராட்சிகள், 157 ஊராட்சிகள், 11 பேரூராட்சி பகுதிகளில் எங்கும் குப்பைகள் தேங்காத வகையிலும், பிளாஸ்டிக் உபயோகத்தை தடுக்கும் வகையிலும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரை சேமித்து வைக்க கூடிய மேல்நிலை தொட்டிகளை சுழற்சி முறையில் சுத்தம் செய்து சுகாதாரமான தண்ணீர் வழங்கும் வகையிலும் வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை மற்றும் நகராட்சிகள் துறை உட்பட அனைத்து அலுவலர்கள் இணைந்து பணியாற்றிட வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் குப்பைகள் அகற்றப்படுவதை உறுதி செய்திடும் வகையில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் கோட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினமும் ஆய்வு செய்து வருகின்றனர். மழைக்காலம் என்பதால் குப்பைகள் தேங்கி, கழிவு நீர் வாய்க்கால்களை அடைத்துக் கொள்ளாத வகையில் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூய்மை பணியாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் தினமும் குப்பைகளை அகற்றி வருகின்றனர். மேலும், அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் மாவட்டத்தின் எந்த பகுதியிலும் பயன்படுத்தக் கூடாது என்ற நோக்கில் நகராட்சி மற்றும் ஒன்றிய ஆணையர்கள் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.

எங்கேனும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு கண்டறியப்பட்டால் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களும் அப்புறப்படுத்தி, கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக மேல்நிலை தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை குளோரின் பவுடர் தெளித்து தூய்மைப்படுத்திய பிறகே தண்ணீரை சேமித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். கரூர் மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் உள்ள 2,124 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், பேரூராட்சி பகுதிகளில் உள்ள 87 தொட்டிகள் மற்றும் கரூர், குளித்தலை நகராட்சிகளில் உள்ள 55 தொட்டிகள் என அனைத்தும் உரிய பணியாளர்கள் மூலம் சுழற்சி முறையில் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. தொட்டியில் இருந்து பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்து விடும் பணியில் ஊரகப்பகுதியில் 1016 பணியாளர்களும், நகராட்சி பகுதியில் 55 பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களும் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். குப்பைகளை முறையாக பிரித்து அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொட்டியிலோ அல்லது வீடு தேடி வரும் தூய்மை பணியாளர்களிடமோ வழங்க வேண்டும். வீதிகளில் குப்பைகளை வீசிச் செல்வது, சாலை ஒரங்களில் குப்பைகளை கொட்டுவது போன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். பயன்படுத்தி தூக்கி எறியப்பட்ட தேவையில்லாத பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டைகள் உள்ளிட்டவைகளில் தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவிததுள்ளார்.

Tags : cleaning ,Karur ,reservoirs ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்