மனைவி மாயமானதால் விரக்தி குடிநீர் தொட்டி மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்

பள்ளிபாளையம், நவ.30: மனைவி மாயமானதால் விரக்தியடைந்த வாலிபர், மேல்நிலை குடிநீர் தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். அவரை தீயணைப்பு படையினர் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் கோவிந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கைலாசம்(33). இவருக்கு பிரியதர்ஷினி(23) என்ற மனைவியும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம், வேலைக்கு சென்று விட்டு மாலையில் கைலாசம் வீடு திரும்பினார். அங்கு குழந்தை மட்டும் விளையாடிக் கொண்டிருந்தது. அவரது மனைவி இல்லை. செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய போது, வெளியில் உள்ளதாகவும், சிறிது நேரத்தில் வீட்டிற்கு வருவதாக பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார். ஆனால், நேற்று காலை வரை வீடு திரும்பவில்லை.

மனைவிக்கு போன் செய்து சலித்து போன கைலாசம், வீட்டிற்கு அருகில் உள்ள 60 அடி உயர மேல்நிலை குடிநீர் தொட்டி மீது மளமளவென ஏறினார். பின்னர், அங்கு தனது மனைவி வராவிட்டால், கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில், வெப்படை தீயணைப்பு நிலைய அதிகாரி சிவக்குமார் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடம் விரைந்தனர். கைலாசத்துடன் பேச்சு கொடுத்தபடியே குடிநீர் தொட்டி மீது ஏறிய தீயணைப்பு வீரர்கள், அவரை மீட்டு கீழே அழைத்து வந்தனர். அப்போது, பக்கத்து வீட்டு வாலிபருடன் மனைவி ஓடி விட்டதாகவும், குழந்தையை வைத்துக்கொண்டு எப்படி வாழ்வேன் என கூறி கைலாசம் கண்ணீர் விட்டு கதறினார். அவரை சமாதானம் செய்த தீயணைப்பு வீரர்கள், பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து, அவருடன் மனைவியை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>