மரக்காணம் அருகே காணிமேடு தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் 10 கிராமங்கள் பாதிப்பு

மரக்காணம், நவ. 27: மரக்காணம் அருகே உள்ள காணிமேடு தரைப்பாலம் நிவர் புயலின் காரணமாக கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால்  மூழ்கியதால் 10 கிராமங்கள்  பாதிக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே காணிமேடு மற்றும் மண்டகப்பட்டு கிராமங்களுக்கு இடையில் ஓங்கூர் ஆற்றில் உள்ளது தரைப்பாலம். இந்த பாலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்தான் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் ஆற்றின் குறுக்கே மிகவும் தாழ்வான நிலையில் உள்ளது. இதனால் இந்த இடத்தில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் வகையில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். ஆனால், இதுவரையில் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் தற்போது வங்கக்கடலில் உண்டான நிவர் புயலின் காரணமாக இப்பகுதியில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு புயல் கரையை கடக்கும் போது பெய்த கனமழையால் இந்த ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக பாலம் முற்றிலும் நீரில் மூழ்கிவிட்டது.

இதுபோல் அதிகப்படியான தண்ணீர் பாலத்தின் மேல் பகுதியில் செல்கிறது. இப்படி தொடர்ந்து வெள்ள நீர் சென்றால் இந்த பாலம் எந்த நேரத்திலும் உடையும் அபாயநிலை உள்ளது. இப்பகுதியில் உள்ள காணிமேடு, மண்டகப்பட்டு, வெள்ளகொண்ட அகரம், புதுப்பேட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் இந்த பாலத்தின் வழியாகத்தான் புதுவை, சென்னை, மரக்காணம் போன்ற இடங்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால், பாலம் உடைந்துவிட்டால் இங்குள்ளவர்கள் அன்றாட தேவைகளுக்கான பொருட்கள் வாங்க, மளிகைக்கடை, மருத்துவமனை, புதுவை பகுதிக்கு வேலைக்கு செல்லுதல் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு கூட 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்கின்றனர். இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். திண்டிவனம் சப்-கலெக்டர் அனு, மரக்காணம் வட்டாட்சியர் உஷா மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories:

>