×

கடலூரில் புயல் சேதங்களை முதல்வர் எடப்பாடி ஆய்வு

கடலூர், நவ.27: கடலூரில் புயல் சேதங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.வங்கக் கடலில் உருவான நிவர் புயல் நேற்று நள்ளிரவில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கரையை கடந்தது. புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பலத்த காற்று வீசியதுடன் கனமழை பெய்தது. இதனால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தன.இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் புயல், மழை சேதங்களை பார்வையிடுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து காரில் கடலூர் வந்தார். பிற்பகல் 2.30 மணி அளவில் ரெட்டிச்சாவடி வழியாக கீழ்குமாரமங்கலம் சென்ற முதல்வர் புயல் காற்றால் 5 ஏக்கரில் முறிந்து கிடந்த வாழை மரங்களை பார்வையிட்டார்.பின்னர் பாதிப்புகள் குறித்து  மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங்பேடி, ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரியிடம் கேட்டறிந்தார். அப்போது மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கரில் வாழை  பயிரிடப்பட்டிருந்ததாகவும் ஒரு சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் மேலும் 2,335 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாகவும், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாடி பகுதியில் 539 ஏக்கர் அளவிற்கு பன்னீர் கரும்பு, மணிலா பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். இதனிடையே மரவள்ளிக் கிழங்கு பாதிப்பு குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார்.இதனை தொடர்ந்து மேல்குமாரமங்கலம், உள்ளேரிப்பட்டு, புதுச்சேரியின் பாகூர், சேலியமேடு, சோரியங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை கடந்து கடலூர் நகருக்கு வந்தார். அங்கு தேவனாம்பட்டினம் கடற்கரை கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் தங்கி இருந்த மக்களிடம் உணவு, மருத்துவ வசதிகள், குறித்து கேட்டறிந்து நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது  முதியவர் ஒருவர் முதல்வரின் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் பின்னர், கடலூர் துறைமுக பகுதிக்கு சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை பார்வையிட்டார். அப்போது மீனவர்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்கள் வழங்கினர். புயலால் மீன் பிடிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் படகின் விலை என்ன? எத்தனை விசை படகுகள் இயக்கப்படுகிறது? செல்லும் வேகம் என்ன? எதைக் கொண்டு விசைப்படகுகள் தயாரிக்கப்படுகிறது? எத்தனை டன் எடை உள்ளது? என அடுக்கடுக்கான கேள்விகளை மீனவர்களிடம் எழுப்பினர். நான் படகு வாங்க போவதில்லை. விவரம் தெரிந்து கொள்ளவே கேட்கிறேன் என முதல்வர் கூறினார்.கடலூர் மீனவ கிராமங்களில் சுருக்குமடி வலை பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ள நிலையில் மீனவ பிரதிநிதிகளிடம் இதுகுறித்து பேசுவார் என பேசப்பட்ட நிலையில் அதுகுறித்து எதுவும் பேசாமல் அங்கிருந்து முதல்வர் புறப்பட்டு சென்று விட்டார். பன்னர் கடலூர் சுற்றுலா மாளிகையில் சிறிது நேர ஓய்வுக்கு பிறகு கடலூர் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் முதல்வர் பங்கேற்றார்.
2 மணி நேரம் ஆய்வுகடலூர் பகுதியில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆய்வை தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி 4.30 மணிக்கு ஆய்வை முடித்துக் கொண்டார். கடலூர் கடற்கரை கிராமங்களில் கடல் அரிப்பு, எம் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் வாழை சேதம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இருந்த நிலையில் பெரும் பாதிப்பில்லாத பகுதிகளில் ஆய்வை முடித்துக் கொண்டு பண்ருட்டி வழியாக சேலம் புறப்பட்டார். ஆய்வின்போது, அமைச்சர் சம்பத், ஒன்றிய சேர்மன் பக்கிரி, முன்னாள் சேர்மன் குமரன் உடன் இருந்தனர்.

Tags : Edappadi ,Cuddalore ,
× RELATED கச்சா எண்ணெய் விலை குறைந்தும்...