×

முடிச்சூரில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம் அமைச்சரை பொதுமக்கள் முற்றுகை

தாம்பரம்: அடையாறு ஆற்றில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் மேற்கு தாம்பரம், முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட அமுதம் நகர், அம்பேத்கர் நகர், மேற்கு லட்சுமி நகர், சக்தி நகர், துர்கா அவன்யூ, நேமிநாதன் நகர் உள்ளிட்ட பகுதியில் சூழ்ந்ததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதேபோல், பெருங்களத்தூர், செம்பாக்கம், சிட்லபாக்கம் பகுதி வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளை பூட்டிவிட்டு தங்களது உறவினர்கள் வீடுகள் மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.

இந்நிலையில், வெள்ள பாதிப்பு பகுதிகளை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், முன்னாள் எம்.பியும், செங்கை மேற்கு மாவட்ட செயலாளருமான சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் நேற்று சிட்லபாக்கம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள கார்லி பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். பின்னர் தாம்பரம் - தர்காஸ் சாலையில் உள்ள அடையாறு ஆற்றை அவர்கள் பார்வையிட்டனர்.

அப்போது ஆற்றின் அருகே உள்ள சமத்துவ பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அமைச்சரை முற்றுகையிட்டு, ‘‘வெள்ள பாதிப்புகளை பார்க்க வந்துவிட்டு, சாலையில் மட்டும் நின்று ஆற்றை பார்த்தால் பாதிப்பு எப்படி தெரியும், வெள்ள நீர் சூழ்ந்துள்ள எங்கள் குடியிருப்பு பகுதி உள்ளே வந்து பார்த்தால்தானே பாதிப்பு தெரியும், உள்ளே வந்து பாருங்கள்.’’ என அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் திகைத்துப்போன அமைச்சர், நீங்கள் போங்கள் நான் பின்னாடியே வருகிறேன் என கூறிவிட்டு அங்கிருந்து காரில் ஏறி, தலைதெறிக்க தப்பியோடினார். இதனைத் தொடர்ந்து அவர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை பார்வையிட்டு, ஆய்வு நடத்தினார்.

Tags : siege ,flood minister ,houses ,Mudichur ,
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...