×

புயல் எச்சரிக்கை நீங்கியதால் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்


திருவாரூர், நவ.27: திருவாரூர் மாவட்டத்தில் நிவர் புயல் எச்சரிக்கை நீங்கியதையடுத்து நேற்று பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புயலின் தாக்கத்தினால் கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் மேலும் இந்தப் புயலையொட்டி கன மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 24 மற்றும் 25 தேதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புயல் கரையை கடக்கும் என்ற எச்சரிக்கையையொட்டி கடந்த 24ம் தேதி மதியம் ஒரு மணி முதல் திருவாரூர், நாகை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அரசின் உத்தரவுப்படி அரசு பேருந்துகள் அனைத்தும் மதியம் ஒருமணி முதல் நிறுத்தப்பட்டன. மேலும் புயல் எச்சரிக்கை காரணமாக வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்ட நிலையில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடியது. இந்நிலையில் இந்த புயலானது புதுச்சேரி அருகே கரையை கடந்த நிலையில், வலுவிழந்து கரையை கடந்ததன் காரணமாக வானிலை மையம் தெரிவித்தவாறு திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கன மழையோ அல்லது பெரும் காற்றோ வீசவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் இந்த நிவாரண முகாம்களில் அழைத்து வந்து தங்க வைக்கப்பட்டனர்.

மேலும் மின் துறை சார்பில் தொடர்ந்து 3 நாட்கள் வரையில் சாலை ஓரங்களில் இருந்த மரங்களின் கிளைகள் அனைத்தும் அகற்றப்பட்டதையடுத்து நேற்று காலை வரையில் ஒரு சில இடங்களை தவிர பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு என்பது துண்டிக்கப்படாமல் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. மேலும் கடந்த 24ம் தேதி மதியம் ஒரு மணி முதல் நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகள் நேற்று காலை 9 மணிக்கு மேல் இயங்க துவங்கின.அதன்படி மாவட்டத்தில் இருந்து வரும் 252 அரசு பேருந்துகளில் மதியம் வரையில் 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டநிலையில், பொது விடுமுறை மற்றும் பள்ளி, கல்லூரிகள் இயங்காது சென்னை, கடலூர் பாண்டிச்சேரி உள்ளிட்ட நீண்டதூர பயணங்கள் மேற்கொள்ள முடியாதது போன்ற காரணங்களால் பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும் பயணிகளின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. மேலும் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் நேற்று வழக்கம்போல் திறக்கப்பட்ட நிலையில் கடந்த 2 தினங்களாக வெறிச்சோடிய சாலைகள் அனைத்திலும் நேற்று மக்கள் நடமாட்டம் காணப்பட்டது. இதனையடுத்து 2 தினங்களாக வீடுகளுக்குள் முடங்கிய பொதுமக்கள் நேற்று இயல்பு நிலைக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Tags : public ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...