×

அரிமளம், திருமயம் பகுதியில் மழையை எதிர்பார்த்திருந்த விவசாயிகள் ஏமாற்றம் திருமண நிகழ்ச்சிதாரர்கள் மகிழ்ச்சி

திருமயம், நவ.27: அரிமளம், திருமயம் பகுதியில் பருவ மழையை எதிர்பார்த்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். அச்சத்தில் இருந்த திருமண நிகழ்ச்சிதாரர்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தில் கடந்த 3 நாட்காளாக நிவர் புயல் பற்றி ஊடகம், சமூக வலைதளங்களில் மக்களை எச்சரிக்கும் விதமாக செய்திகள் பரவின. இதனால் டெல்டா மாவட்ட மக்கள் கஜா புயலை போல் சேதத்தை ஏற்படுத்துமோ என அஞ்சினர். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை நிவர் புயல் வலுவிழந்து கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் டெல்டா மாவட்டங்களை அச்சுறுத்திய புயல் ஓய்ந்தது. இதனால் கடந்த சில நாட்களாக அச்சத்தில் இருந்த மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

அதே சமயம் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருமயம் பகுதியில் இதுவரை வடகிழக்கு பருவ மழையால் எதிர்பார்த்த அளவு மழை பொழிவு இல்லை. இதனால் தற்போது உருவாகியுள்ள நிவர் புயலால் மழை வரும் என அப்பகுதி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காந்திருந்தனர். ஆனால் புயல் கரையை கடந்த சுவடே தெரியாத வகையில் அரிமளம், திருமயம் பகுதிகள் இருந்தன. இதனால் பருவ மழையை எதிர்பார்த்து சம்பா நடவு செய்துள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இதனிடையே ஏற்கனவே கஜா புயலினால் பாடம் கற்ற அரிமளம், திருமயம் பகுதி மக்கள் வீட்டருகே இருந்த மரங்களின் கிளைகளை அகற்றி புயலை எதிர்கொள்ள தயாராக இருந்தது குறிபிடத்தக்கது.

மேலும் மாநில அரசு, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் படி ஒவ்வொரு ஊராட்சியிலும் மணல் மூட்டைகள் தயார் செய்து புயல், மழையால் ஏற்படும் வெள்ள பெருக்கை சமாளிக்க தயார் நிலையில் இருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை அரிமளம், திருமயம் பகுதியில் விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் சிறிது நேரம் மழை பெய்தது. இதனிடையே நேற்று முகூர்த்த நாள் என்பதால் அரிமளம், திருமயம் பகுதியில் திருமண நிகழ்ச்சிகள் களை கட்டியது. இந்நிலையில் வானிலை மையம் புயல் வரும் என எச்சரித்ததால் திருமணம் நடத்துவோர் பீதியடைந்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவு புயல், மழை வராததால் திருமணம் நடத்துவோர் நிம்மதியடைந்தனர்.

Tags : Arimalam ,Thirumayam ,guests ,wedding ,
× RELATED அரிமளம் அம்மன் கோயிலில் பங்குனி...