தோகைமலை- திருச்சி மெயின் ரோடு டி.இடையபட்டியில் ஆபத்தான வளைவால் அடிக்கடி விபத்து

தோகைமலை, நவ. 27: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே திருச்சி தோகைமலை மெயின் ரோட்டில் டி.இடையபட்டி மேற்கு பகுதியில் உள்ள எஸ் வளைவில் தினந்தோறும் ஏற்பட்டு வரும் விபத்துகளை தடுப்பதற்கு, நெடுஞ்சாலைதுறையினர் தடுப்பு வேலி அமைப்பதுடன், எதிர்திசையில் வரும் வாகனங்கள் தெரிவதற்கு பிரதிபலிப்பான் கண்ணாடி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். டி.இடையபட்டி மேற்கு பகுதியில் உள்ள அழகனாம்பட்டி பிரிவு ரோடு மேற்கு பகுதியில் ஆபத்தான எஸ் வடிவ வளைவு உள்ளது. இதேபோல் ஆபத்தான வளைவு அருகே தனியார் தோட்டத்திற்கு சுற்றுசுவர் அமைந்து இருப்பதால் கிழக்கு திசையில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கும், மேற்கு திசையில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கும் எதிர் திசையில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை என்று கூறுகின்றனர்.

மேலும் இந்த இடத்தில் வளைவு இருப்பதே பல வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. மிகக்குறுகிய வளைவாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனம் செலுத்துவதற்குள் ரோட்டில் நேராக சென்று பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர். இதேபோல் வளைவு அருகே தனியார் தோட்ட சுற்றுசுவர் அமைந்து இருப்பதால் எதிர்திசையில் வரும் வாகனங்கள் தெரியாமல் வாகனங்கள் நேருக்குநேர் மோதிக்கொள்ளும் விபத்துகளும் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். ஆபத்தான எஸ் வடிவு கொண்ட வளைவு பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு எந்த ஒரு பாதுகாப்பு தடுப்பு வேலியும் அமைக்காமல், அப்படியே திறந்த நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்வதாக தெரிவிக்கின்றனர்.

திருச்சி தோகைமலை மெயின் ரோட்டில் இருசக்கர, கனரக வாகனங்கள் உள்பட நூற்றுக்கணக்கான வாகனங்கள் தினந்தோறும் சென்று வரும் நிலையில் தினந்தோறும் விபத்துகளை சந்தித்து வருவதோடு சில உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவதாக வேதனை தெரிக்கின்றனர்.இதுகுறித்து குளித்தலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், திருச்சி தோகைமலை மெயின் ரோட்டில் டி.இடையபட்டி அழகனாம்பட்டி பிரிவு ரோட்டின் மேற்கு பகுதியில் உள்ள எஸ் வடிவ ஆபத்தான வளைவு பகுதியில் இதுவரை தடுப்பு வேலி அமைக்கவில்லை என்று கூறுகின்றனர். ஆகவே பாதுகாப்பு தடுப்பு வேலி அமைப்பதுடன் எதிர்திசையில் வரும் வாகனங்கள் தெரிவதற்கு கண்ணாடி பலகை அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories:

>