×

மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


கிருஷ்ணகிரி, நவ.27: நிவர் புயல் கரையை கடந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நிவர் புயல் மரக்காணம் அருகே கல்பாக்கத்தில் கரையை கடந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை 4 மணி முதல் பரவலாக மழை பெய்யத் துவங்கியது. இந்த மழை நேற்று காலை 8 மணி வரை நீடித்தது. பின்னர், சுமார் 2 மணி நேரம் லேசான தூறல் பெய்தது. படிப்படியாக கனமழை பெய்ய துவங்கியது. இந்த மழையால் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல், வீடுகளிலேயே முடங்கினர். அத்தியாவசிய தேவைக்காக வெளியே வந்த ஒருசிலரும் குடை பிடித்தபடி சென்றதை காண முடிந்தது.

அதேபோல், காய்கறி கடை உள்ளிட்ட சாலையோர வியாபாரிகள், கடைகளை மூடிவிட்டனர். சாலைகளில் இருசக்கர வாகனம் மற்றும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. சாலைகள் மற்றும் தாழ்வான தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த மழையால் குளம், குட்டைகள், ஏரிகளில் ஓரளவிற்கு தண்ணீர் தேங்கியதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று காலை 7 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக பெனுகொண்டாபுரத்தில் 25.40 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. இதேபோல், ராயக்கோட்டையில் 25 மி.மீ., போச்சம்பள்ளியில் 24.60 மி.மீ., ஊத்தங்கரையில் 19.60 மி.மீ., கிருஷ்ணகிரியில் 19.20 மி.மீ., பாரூரில் 18 மி.மீ., நெடுங்கல் பகுதியில் 14.20 மி.மீ., சூளகிரியில் 9 மி.மீ., தேன்கனிக்கோட்டையில் 4 மி.மீ., மற்றும் ஓசூர் பகுதியில் 4 மி.மீ., என மொத்தம் 163 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.


Tags :
× RELATED விழிப்புணர்வு பிரசாரம்