நிவர் புயலால் நீலகிரி மாவட்டத்திற்கு பாதிப்பு ஏதுமில்லை

ஊட்டி,நவ.27: நிவர் புயல் தாக்கம் நீலகிரி மாவட்டத்தில் பரவலாக எதிரொலிக்காத நிலையில், ஊட்டி நகரில் மட்டும் நேற்று முன்தினம் இரவு மழை கொட்டியது. வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று அதிகாலை கரையை கடந்த போதிலும் சென்னை, கடலூர், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் தாக்கம் கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி, உள் மாவட்டங்களிலும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திலும் இந்த மழையின் தாக்கம் இருக்க கூடும் என கூறப்பட்டது. இதனால், அனைத்து துறைகளையும் மாவட்ட நிர்வாகம் உஷார் படுத்தியது. நிவாரண மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள அனைத்துைறயினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் முன் எச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அனைத்து புயல் நிவாரண மையங்களும் திறக்கப்பட்டன.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நிவர் புயலின் தாக்கம் இல்லாமல் போனது. நேற்று முன்தினம் முதல் முன் நீலகிரி மாவட்டத்தில் பகல் நேரங்களில் வழக்கம் போல், வெயில் காணப்பட்டது. நேற்று முன்தினம் பிற்பகலுக்கு மேல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. எனினும், ஊட்டி நகரில் மட்டுமே நேற்று முன்தினம் இரவு முழுக்க மழை கொட்டித் தீர்த்தது. எனினும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.  நேற்று காலை முதல் மாலை வரை வெயில் மற்றும் அவ்வபபோது மேக மூட்டம் சூழ்ந்து மாறுப்பட்ட காலநிலை நீடித்தது. நிவர் புயல் நீலகிரி மாவட்டத்தை பாதிக்காத நிலையில், பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் நிம்மதியடைந்தனர்.

நேற்று நீலகிரியில் பெய்த மழையின் அளவு மி.மீ.,ல்: ஊட்டி 25, நடுவட்டம் 5, கல்லட்டி 5, கிளன்மார்கன் 7, கேத்தி 8, குன்னூர் 1.5, கோத்தகிரி 9, கோடநாடு 18. நேற்று பகல் நேரங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் மாலை முதல் அதிகாலை வரை குளிரும் சற்று அதிகமாக காணப்பட்டது.

Related Stories:

>