×

தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் மத்திய-மாநில அரசு அலுவலகங்கள் முற்றுகை-மறியல்


கோவை, நவ. 27:  கோவையில் மத்திய-மாநில அரசு அலுவலகங்களை தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். மறியல் போராட்டமும் நடந்தது. 20 சதவீத பணிகள் பாதிக்கப்பட்டன. 500 பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்தும், பொதுத்துறை சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்தும், வேளாண்மை சட்ட திருத்தத்தை எதிர்த்தும், அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நவ.26 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டன. அதன்படி, கோவையில் நேற்று வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வராத காரணத்தால், ரெகுலர் வேலைகள் பாதிக்கப்பட்டன. வங்கி, இன்சூரன்ஸ், தொலைத்தொடர்பு சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டது.   ஆனால், பஸ், ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம்போல் இயங்கின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை. கோவை மாநகர் பகுதியில் 30 சதவீத ஆட்டோக்கள் இயங்கவில்லை. கோவையில் இருந்து கேரளா செல்லும் பஸ்கள் ஓடவில்லை.

அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் மற்றும் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் மற்றும் சாலை மறியல் நடந்தது. இதில், கோவை தொகுதி எம்.பி. பி.ஆர்.நடராஜன், தொழிற்சங்க  தலைவர்கள் சிடிசி ரத்தினவேலு, பெரியசாமி, மணி, தமிழ்செல்வன், வணங்காமுடி  (எல்.பி.எப்.), ராஜாமணி, மனோகரன், வீராசாமி (எச்.எம்.எஸ்.), பத்மநாபன், கிருஷ்ணமூர்த்தி  (சி.ஐ.டி.யு.), தியாகராஜன், பழனிசாமி (எம்.எல்.எப்.), மதியழகன், ஜெயபால்,  துளசிதாஸ், சண்முகம் (ஐ.என்.டி.யு.சி.) உள்பட 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். போலீசார் அனைவரையும் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில், கோவை சென்ட்ரல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. ரயில்வே தனியார்மயம் கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தினர் கோவை கூட்ஷெட் ரோட்டில் உள்ள ரயில்வே பணிமனை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவையில் உள்ள பஞ்சாலைகள், இன்ஜினியரிங் ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் கோவை திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி. கோட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வருமான வரித்துறை, தபால், தொலைத்தொடர்பு துறை உள்ளிட்ட மத்திய அரசுத்துறை அலுவலகம் முன்பு ஏராளமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்வாரிய ஊழியர்கள் பெரும்பகுதியினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தலைமை தந்தி அலுவலகத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே அலுவலர்கள் பணிக்கு வந்திருந்தனர். பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் ஊழியர்கள் பணிக்கு வராத காரணத்தால், அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. 20 சதவீத பணிகள் பாதிக்கப்பட்டன. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சில அலுவலகங்களில் ஊழியர்கள் குறைவாகவே பணிக்கு வந்திருந்தனர். இதனால் கலெக்டர் அலுவலக பணிகள் சற்று பாதித்தது. வேலைநிறுத்த போராட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஸ் நிலையங்கள், பஸ் டிப்போக்கள், ரயில் நிலையங்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags : State Government ,Trade Unions Strike Central ,Siege ,
× RELATED வறட்சி நிவாரணம் வழங்க ஒன்றிய அரசுக்கு...