திருவண்ணாமலை தீபத்திருவிழா 7ம் நாள் உற்சவம் அண்ணாமலையார் கோயில் 5ம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் பவனி வெள்ளி தேரோட்டம், தேர் திருவிழா ரத்து

திருவண்ணாமலை, நவ.27: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழாவின் 7ம் நாள் உற்சவம் நேற்று நடந்தது. தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதால், கோயில் 5ம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் பவனி வந்து அருள்பாலித்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் காலை மற்றும் இரவில் கோயில் 5ம் பிரகாரத்தில் சுவாமி உலா நடந்து வருகிறது. கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக, மாடவீதியில் சுவாமி வீதியுலா ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால், இந்த ஆண்டு வெள்ளி தேரோட்டம், தேர் திருவிழா ஆகியவை நடைபெறவில்லை.

இந்நிலையில், தீபத்திருவிழாவின் 7ம் நாளன்று வழக்கமாக மாடவீதியில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை தொடர்ந்து நடைபெறும் தேரோட்டத்தில், ஐந்து ரதங்களும் அடுத்தடுத்து மாடவீதியில் அசைந்தாடி வரும் பேரெழிலை பக்தி பெருக்குடன் பக்தர்கள் மெய்யுருக தரிசனம் செய்வார்கள். ஆனால், இந்த ஆண்டு தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதால், அண்ணாமலையார் கோயில் 5ம் பிரகாரத்தில் சுவாமி உலா நடந்தது. அதையொட்டி, நேற்று காலை 7 மணியளவில், கோயில் 5ம் பிரகாரத்தில் ஆயிரங்கால் மண்டபம் அருகே தனித்தனி வெள்ளி விமானங்களில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

அதைத்தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் அலங்கார ரூபத்தில் 5ம் பிரகாரத்தில் பவனி வந்தனர். காலை 9.30 மணியளவில் பஞ்சமூர்த்திகள் பவனி நிறைவடைந்தது. கொட்டும் மழையிலும் தொடர்ந்து சுவாமி உலா நடந்தது. கோயில் ஊழியர்கள், திருப்பணியாளர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மட்டுமே பங்கேற்றனர். பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. வழக்கம் போல, கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பொது தரிசன வரிசையில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. முன்னதாக, தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதால், மாடவீதியில் நிலை நிறுத்தியுள்ள பஞ்ச ரதங்களுக்கும் சிறப்பு பூஜை மட்டும் நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும் தேரோட்டம் இந்த ஆண்டு நடைபெறாதது பக்தர்களிடையே ஏமாற்றத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியது.

Related Stories:

>